உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் பிஸி

கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் பிஸி

மதுரை : கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் நிர்வாக காரணம் என்ற பெயரில் தென் மாவட்டங்களிலுள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கும் முன் நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினாலும் நடப்பதாக தெரியவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி முடித்துள்ள நிலையில், கல்வித்துறையில் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை. சில நாட்களுக்கு முன் பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் மட்டும் வெளியிடப்பட்டன.இந்நிலையில் 'நிர்வாக காரணம்' என்ற பெயரில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் அரசியல், அதிகாரிகள், அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஆசிரியர் சங்கங்கள் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி, திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல இடங்களுக்கு மாறுதல் உத்தரவுகள் மறைமுகமாக பிறப்பிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் நிர்வாக மாறுதல் பிரச்னை எழுகிறது. மாவட்டம் வாரியாக காலி இடங்கள் பட்டியல் குறித்து சி.இ.ஓ., அலுவலகங்களில் முன்கூட்டியே ஒட்டி வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். கலந்தாய்வு நடக்கும் போது பல இடங்கள் மறைக்கப்படுகின்றன. அந்த இடங்கள் குறித்து கேட்டால் மாவட்ட அதிகாரிகள், 'எங்களுக்கே இப்போதுதான் தெரிகிறது' என தெரிவித்துவிட்டு கலந்தாய்வை தொடர்ந்து நடத்துவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர்.நிர்வாக மாறுதல் பின்னணியில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் பின்னணியில் உள்ளனர். இப்பிரச்னைகளை வெளிக்கொண்டு வராமல் இருக்க சில ஆசிரியர் சங்கங்களும் துணை போகின்றன. சீனியாரிட்டி இருந்தும் விரும்பிய பள்ளிகளை தேர்வு செய்யும் உரிமை பறிபோகிறது. அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

சலுகை பரிசீலிக்கப்படுமா

மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தவர், முன்னாள் ராணுவத்தினர், தீராத நோய் பாதிப்பு உள்ளவர், சீனியாரிட்டி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மாறுதலின்போது சலுகை வழங்கப்படுகிறது. கடைசியாக சீனியாரிட்டி என்ற அடிப்படையில் வரும்போது சீனியாரிட்டியில் இருக்கும் ஆசிரியர்கள் பாதிக்கின்றனர். எனவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சலுகையை பயன்படுத்தும் வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mohan Nikki
ஜூன் 25, 2025 14:17

தனியார் பள்ளிகளில் முற்ச்சி செய்யுங்கள் .


Mars
ஜூன் 24, 2025 11:21

இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா? 20 வருடங்களுக்கும் மேலாக இன்னும் சொந்த ஊர் மாறுதல் பெற முடியாதபடி இன்னமும் இப்படியே போனா காத்திருக்கும் நாங்கள் எந்த ஆட்சிக்காலத்தில்தான் சொந்த ஊர் செல்வது? இதற்கு விடிவே கிடையாதா?


nithya nithi
ஜூன் 24, 2025 09:12

I done M.A, B.,ed, pls I want job.i have two girl daughters.financial problem


முக்கிய வீடியோ