மேலும் செய்திகள்
ஆபரண தங்கம் விலை; சவரனுக்கு ரூ.560 உயர்வு
21 minutes ago
ஆராய்ச்சியாளர்களுக்கு மகளிர் ஆணையம் உதவித்தொகை
40 minutes ago
வாக்காளர் பெயர் சேர்ப்பு இன்று, நாளை சிறப்பு முகாம்
45 minutes ago
சென்னை: 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேரை, போலீசார் குண்டுகட்டாக கைது செய்து, பஸ்சிலேயே சென்னையை சுற்றி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தில், 2009 ஜூன் 1ம் தேதிக்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைந்து, 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த 2022 டிசம்பர் மாதம், டி.பி.ஐ., வளாகத்தில், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.கருத்து கேட்பு
இது தொடர்பாக, ஆய்வு செய்து தீர்வு காண, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய மூவர் குழுவை , முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். இக்குழு நான்கு கூட்டங்கள் நடத்தி, ஆசிரியர் சங்கங்களின் கருத்துக்களை கேட்டது. ஆனால், தீர்வு ஏற்படவில்லை. எனவே, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம், கோரிக்கையை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்தது.கடந்த 1ம் தேதி, கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். கடந்த 5ம் தேதி, சென்னை யில் பேரணி நடத்தினர். டி.பி.ஐ., எனப்படும் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தை, இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேற்று முற்றுகையிட்டனர். கோரிக்கை பதாகைகளை ஏந்தி, சாலையில் அமர்ந்து போராடினர்.அவர்களை போலீசார் குண்டுகட்டாக துாக்கிச்சென்று கைது செய்தனர். அப்போது, போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில ஆசிரியைகள் மயக்கமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.போலீசார், கைது செய்த ஆசிரியர்களை அரசு பஸ்களில் ஏற்றினர். அவர்களை தங்க வைக்க திருமண மண்டபங்கள் கிடைக்காததால், சென்னை கிண்டி, நந்தம்பாக்கம், திரு.வி.க.நகர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு, பஸ்சில் 'டீசல் தீரும் வரை' சுற்றி வந்தனர். காலை 11:30 மணிக்கு கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுடன், மாலை 5:00 மணி வரை, வாகனத்திலேயே போலீசார் சுற்றி வந்தனர்.பரபரப்பு
கிண்டி கத்திபாரா மேம்பாலத்தை, மூன்று முறை சுற்றியதால், ஆத்திரமடைந்த ஆசிரியர்கள், வாகனத்தை நிறுத்தி சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பர பரப்பு ஏற்பட்டது. இறுதி யாக மாலையில் அவர்களை போலீசார் விடுவித்தனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போராட்டம் நடத்த, தென்மாவட்டங்களில் இருந்து ரயிலில் சென்னை வந்த ஆசிரியர்களை, ரயில் நிலைய வாசலிலேயே போலீசார் கைது செய்தனர். ரயிலில் வந்த பயணியரின் மொபைல் போன்களையும் ஆய்வு செய்தனர். இதனால், எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் பேச்சு நடத்த, பள்ளிக்கல்வித் துறை அழைப்பு விடுத்தது. தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை உதவி செயலர் சரஸ்வதி தலைமையில், நேற்று மாலை பேச்சு நடந்தது. அதில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலர் ராபர்ட் தலைமையில் ஐந்து பேர் பங்கேற்றனர். பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், போராட்டம் இன்றும் தொடரும் என, ஆசிரியர்கள் அறிவித்தனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: இடைநிலை ஆசிரியர்களை, காவல் துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. 'சம வேலைக்கு சம ஊதியம்' என்று வாய்கிழிய வாக்குறுதி அளித்து விட்டு, நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் தி.மு.க., அரசின் பாசிச போக்கு வெட்கக்கேடானது. தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: வீண் செலவுகளுக்கும், வெற்று விளம்பரங்களுக்கும் பணத்தை வாரி இறைக்கும் தி.மு.க., அரசுக்கு, ஆசிரியர்களுக்கு உழைப்புக்கேற்ப ஊதியத்தை வழங்க மட்டும் கசக்கிறதா? பா.ம.க., தலைவர் அன்புமணி: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை செயல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். ஆசிரியர்களின் போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்ற எண்ணத்தை, தி.மு.க., அரசு கைவிட வேண்டும்.
21 minutes ago
40 minutes ago
45 minutes ago