கடலில் காற்றாலை, சூரியசக்தி மின் திட்டங்கள் மிதக்கும் தளங்களுக்கு தொழில்நுட்பம் உருவாக்கம்
சென்னை: கடலில் காற்றாலை, சூரியசக்தி மின் திட்டங்களை செயல்படுத்த தேவைப்படும் மிதக்கும் தளங்கள் அமைப்பதற்கான, கட்டுமான தொழில்நுட்பத்தை, சென்னையில் செயல்படும், மத்திய அரசின் எஸ்.இ.ஆர்.சி., எனப்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் உருவாக்கி உள்ளது. உலகம் முழுதும், சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மத்திய அரசு முடிவு நம் நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய அந்த வகை மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துமாறு, மாநில மின் வாரியங்கள், தனியார் நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நம் நாட்டில், நிலத்தில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் கடலில் காற்றாலை மின் நிலையங்கள் இருப்பது போல், நம் நாட்டிலும் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சாதகமான சூழல், தமிழகம் மற்றும் குஜராத்தில் உள்ளது. இரு மாநிலங்களிலும் தனியார் நிறுவனங்கள், அந்த திட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போது, கடலில் காற்றாலை, சூரியசக்தி மின் திட்டங்களை செயல்படுத்த தேவைப்படும் மிதக்கும் தளங்கள் அமைப்பதற்கான கட்டுமான தொழில்நுட்பத்தை, மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சிலின் கீழ் இயங்கும், எஸ்.இ.ஆர்.சி., உருவாக்கி உள்ளது. இது குறித்து, அதன் இயக்குநர் ஆனந்தவள்ளி கூறியதாவது: சூரியசக்தி மின் நிலையம் அமைக்க நிலம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, கடலில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளது. சவால்
கடல் காற்று, கடல் அலை ஆகியவற்றை சமாளித்து, கடலில் கட்டுமானம் அமைப்பது சவால் நிறைந்தது. இதற்கான தொழில்நுட்பம் வெளி நாடுகளில் தான் உள்ளது. நம் நாட்டில், கடலில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, தனித்துவமான மிதக்கும் தளங்கள் அமைப்பதற்கான, கட்டமைப்பு தொழில்நுட்பத்தை உருவாக்க, இந்த ஆராய்ச்சி துவங்கியது. எஸ்.இ.ஆர்.சி., விஞ்ஞானிகள், தற்போது எடை குறைவான, அதேசமயம் அடர்த்தி நிறைந்த, உறுதியான இழை வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட கலப்பு பொருட்களை பயன்படுத்தி, மிதக்கும் தளங்களை உருவாக்கி உள்ளனர். விரைவில் சோதனை ரீதியாக, கடலில் பயன்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.