குடும்ப நலநிதி பெறுவதில் சிக்கல் கோவில் பூசாரிகள் குற்றச்சாட்டு
அறநிலையத்துறை செயல் அலுவலர்களின் அலட்சியம் காரணமாக, கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள் குடும்ப நல நிதி பெறுவதில் சிக்கல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்டோர், குறைந்த வருவாய் மூலம் குடும்பம் நடத்தி வருகின்றனர். ஒரு கால பூஜை நடந்து வரும் கிராம கோவில்களில் பணியாற்றுவோர், பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மூலமாகவே, குடும்ப செலவுகளை ஈடு செய்து கொள் கின்றனர். திடீரென இறந்து விட்டால், இவர்களது குடும்பத்தினருக்கு, குடும்ப நலநிதி கிடைக்கும். இதற்காக, மாதந்தோறும் அர்ச்சகர்கள், பூசாரிகளிடம் இருந்து, மாதந்தோறும் 60 ரூபாய் சந்தா தொகை பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. செயல் அலுவலர்களின் அலட்சியம் காரணமாக, சந்தா தொகை பிடித்தம் செய்யப்படாமல், குடும்ப நலநிதி கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு கூறியதாவது: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38,000க்கும் மேற்பட்ட கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும், குடும்ப நலநிதி என்பது பொருந்தும். இதற்கான சந்தா தொகையை பிடித்தம் செய்யுமாறு, அறநிலையத்துறை ஆணையர் மூலம், ஆண்டுதோறும் செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. இருப்பினும், செயல் அலுவலர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள் யாரேனும் இறந்துவிட்டால், குடும்ப நல நிதி பெற முடியாமல் அவர்களது குடும்பங்கள் பரிதவிக்கின்றன. தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -