உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து - முஸ்லிம் அமைப்புகள் போட்டி போராட்டத்தால் பதற்றம்

ஹிந்து - முஸ்லிம் அமைப்புகள் போட்டி போராட்டத்தால் பதற்றம்

சென்னை:கைதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோருக்கு ஆதரவாக, த.மு.மு.க., உள்ளிட்ட முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், சிறைத் துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக ஹிந்து அமைப்பினரும், அதே நாளில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். கடந்த, 2013 ஜூலையில், வேலுாரில் ஹிந்து முன்னணி நிர்வாகி வேலுார் வெள்ளையப்பன், சேலத்தில் பா.ஜ., நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர், அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், 47, பிலால் மாலிக், 37, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில், 50 ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், சென்னை புழல் சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். தன் அறையில் சோதனை செய்ததால் கோபமடைந்த பக்ருதீன், 2024 டிசம்பரில், புழல் சிறை துணை ஜெயிலர் ஜாவித்தை தாக்கி உள்ளார். இது தொடர்பாக, புழல் காவல் நிலைய போலீசார், ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அதேபோல, கடந்த 17ல், பிலால் மாலிக் அறையில், சிறைத்துறை அதிகாரிகள் சாந்தகுமார், மணிகண்டன் ஆகியோர் சோதனை செய்து, 2 மொபைல் போன்கள், 'சார்ஜர்' ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.அப்போது, பிலால் மாலிக், சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இது தொடர்பாகவும் புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது.இந்நிலையில், புழல் சிறையில் முஸ்லிம் கைதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை எழும்பூரில் உள்ள, சிறைத்துறை தலைமை அலுவலகத்தை, நாளை மறுநாள் முற்றுகையிடப் போவதாக, த.மு.மு.க.,வினர் அறிவித்து உள்ளனர். பல முஸ்லிம் அமைப்பினர் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே நாளில், பாரத் ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் உள்ளிட்ட பயங்கரவாதிகள், சிறைத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், அதிகாரிகளின் குடும்பத்தாருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாளிடம் மனு கொடுக்க உள்ளனர். இரு தரப்பினரும், ஒரே நாளில் போராட்டத்தில் ஈடுபட இருப்பதால், சிறைத் துறை தலைமை அலுவலகம், போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தகவல் வெளியே அனுப்பட்டதா?

பிலால் மாலிக் அறையில் சோதனை செய்த சிறைத்துறை அதிகாரி சாந்தகுமார், சோதனைக்குப் பின், புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், இரு சாதாரண மொபைல் போன்கள், இரு சார்ஜர்கள் மற்றும் இரு டேட்டா கேபிள்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்து உள்ளார். சாதாரண செல்போனில் டேட்டா கேபிள்கள் பயன்படுத்த முடியாது. அதனால், சிறையில் ஆன்ட்ராய்டு செல்போன்களோ, லேப் - டாப்போ இருந்து, ரகசிய தகவல்கள் சிறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், மீண்டும் சோதனை நடத்த சிறைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை