உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை குண்டு வெடிப்புக்கு பின் தலைமறைவு 29 ஆண்டாக தேடப்பட்ட பயங்கரவாதி சிக்கினார்

கோவை குண்டு வெடிப்புக்கு பின் தலைமறைவு 29 ஆண்டாக தேடப்பட்ட பயங்கரவாதி சிக்கினார்

சென்னை:கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சாதிக் என்ற டெய்லர் ராஜா, 29 ஆண்டுகளுக்கு பின், கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.கடந்த 1998, பிப்., 14ம் தேதி, கோவையில் 12 கி.மீ., சுற்றளவில், 11 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன.

குண்டு வெடிப்பு

இதனால், காந்திபுரம், அரசு மருத்துவமனை, டவுன் ஹால், ஆர்.எஸ்.புரம் என, பல முக்கிய பகுதிகள் குண்டு வெடிப்பு தாக்குதலில் சீர்குலைந்தன; 58 பேர் உயிரிழந்தனர்; 2,000க்கும் மேற்பட்டோர் படுகாயம்அடைந்தனர். போலீஸ் விசாரணையில், அல் உம்மா பயங்கரவாத அமைப்பினர், தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த அமைப்பின் தலைவர் பாஷா, செயலர் அன்சாரி உள்ளிட்ட 160 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், பாஷா உள்ளிட்ட 30 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. கடந்தாண்டு டிசம்பரில் பரோலில் வந்த பாஷா, உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதற்கிடையே, இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான, கோவை தெற்கு உக்கடம் பிலால் காலனியைச் சேர்ந்த, சாதிக் என்ற டெய்லர் ராஜா, 48,தலைமறைவானார். இவர், அல் உம்மா பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்கு முன், தையல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இதனால், டெய்லர் ராஜா என அழைக்கப்பட்டார். ஷாஜகான் மஜீத் மகாண்டர், ஷாஜகான் ஷைக் ஆகிய பெயர்களில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்தார்.

வாடகைக்கு வீடு

இவர், 1996ல், கோவையில் பெட்ரோல் குண்டு வீசி, ஜெயிலர் பூபாலன் என்பவரை கொலை செய்தார். அதே ஆண்டில், நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் சாயிதா என்பவரை கொலை செய்தார்.இவர், 1997ல் அல் உம்மா கூட்டாளிகளுடன், கோவையில் இருந்து மதுரைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று, மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் ஜெயபிரகாஷை தீர்த்து கட்டினார். அதேபோல, 1998ம் ஆண்டு, கோவை மாநகரில் வள்ளல் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து, அங்கு வெடிகுண்டுகளை தயாரித்து பதுக்கி வைத்திருந்தார்.

முக்கிய குற்றவாளி

இங்கிருந்து தான், கோவை தொடர் குண்டு வெடிப்புக்கு தேவையான வெடிகுண்டுகளை 1998ல், தன் கூட்டாளிகளுக்கு வினியோகம் செய்தார். இவர் மீது கொலைகள், ஹிந்து தலைவர்கள் மீது தாக்குதல், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை குண்டு வைத்து கொல்ல முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. டெய்லர் ராஜா, 1996ல் இருந்து போலீசாரிடம் சிக்காமல், பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்தார். கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, 29 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தார். ஆனால், இவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பதை கூட, போலீசாரால் துப்பு துலக்க முடியவில்லை. சமீபத்தில், தமிழக காவல் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், ஆந்திராவில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோரை கைது செய்தனர். இவர்களும் அல் உம்மா பயங்கரவாதிகள் தான். கடந்த, 1999ம் ஆண்டு, தமிழகம் மற்றும் கேரளாவில் ஏழு இடங்களில் குண்டு வெடிப்புகளை நடத்தி தலைமறைவாகினர். தற்போது போலீசிடம் சிக்கிய இவர்கள் அளித்த தகவல்படிதான், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்தில் பதுங்கி இருந்த டெய்லர் ராஜாவை, நேற்று கைது செய்தனர். பின், கோவை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

முதல்வர் பாராட்டு

இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் வெ ளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 30 ஆண்டுகளாக தமிழக காவல் துறை, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் என, யாருக்கும் பிடிபடாமல் இருந்த மூன்று முக்கிய பயங்கரவாதிகளை, சமீபத்தில் நம் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுகள்' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை