உசிலம்பட்டி: தனது சித்தப்பா குடும்பத்தினர் போலி ஆவணம் தாயாரித்து, நிலமோசடி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என, இ.கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் மகன் டேவிட் ஜவகர், மதுரை மாவட்டம், உத்தப்ப நாயக்கனூர் போலீசில், புகார் தெரிவித்துள்ளார். தா.பாண்டியன் குடும்பத்தினருக்குச் சொந்தமான, 22 ஏக்கர், 'டேவிட் பண்ணை,' உசிலம்பட்டி அருகே, உத்தப்பநாயக்கனூரில் உள்ளது. இந்த சொத்து தொடர்பாக தா. பாண்டியன் குடும்பத்திற்கும், அவர் தம்பி ராஜன் குடும்பத்திற்கும் இடையே, சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் போலீசில் புகார் செய்து, கோர்ட்டில் வழக்கும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டேவிட் பண்ணைக்கு, தா.பாண்டியன் மகன் டேவிட் ஜவகர், விவசாய பணிகள் செய்ய, வேலையாட்களுடன் சென்றார். அவரை ராஜன், அவரது மனைவி ரூபி, மகன்கள் பிரேம்ஆனந்த், பிரேம்சந்தர், ஜெபராஜ் தடுத்தனர். டேவிட் ஜவகர், உத்தப்பநாயக்கனூர் போலீசில் கொடுத்துள்ள புகாரில், '2000ல், டேவிட் பண்ணை சொத்துக்களை எனது தந்தையின் சகோதர, சகோதரிகளிடம் இருந்து அவர்களுக்கான பங்கு நிலங்களுக்கு பணம் கொடுத்து வாங்கியுள்ளோம். இதில் ராஜன் தரப்பினர், இந்த நிலம் தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து எங்களை மோசடி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், எங்களை தாக்கவும் முற்படுகின்றனர்' என, கூறியுள்ளார்.ராஜன், ரூபி, பிரேம்ஆனந்த், பிரேம்சந்தர், ஜெபராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.