உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,க்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை ரத்து

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,க்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை ரத்து

சென்னை:அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ராமச்சந்திரன், அவரது மகன், வங்கி அதிகாரி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக, 2014 - 19ம் ஆண்டில் பதவி வகித்தவர் கே.என்.ராமச்சந்திரன்; அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அவர், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலராக உள்ளார். அறக்கட்டளையின் கீழ், சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லுாரி இயங்குகிறது. அதன் தலைவராக, ராமச்சந்திரனின் மகன் ராஜசேகரன் உள்ளார்.அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கில் கடன் வழங்க ஒப்புதல் அளித்ததில், வங்கி அதிகாரி அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், கடனுக்கு கைமாறாக, வங்கி அதிகாரியின் மகன் அமெரிக்கா செல்ல விமான டிக்கெட் கட்டணத்தை, கல்வி அறக்கட்டளை கணக்கில் செலுத்தியதாகவும், அதிகாரியின் குடும்பம் லண்டனில் தங்க, ராமச்சந்திரனின் கிரெடிட் கார்டு வாயிலாக ஓட்டல் அறை பதிவு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் மூத்த அதிகாரி தியாகராஜன், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கே.என்.ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரன் ஆகியோருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. வழக்கை, சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வங்கி அதிகாரி தியாகராஜனுக்கு, 5 ஆண்டு சிறை, 13 லட்சம் ரூபாய் அபராதம்; நிர்வாக அறங்காவலர் ராமச்சந்திரனுக்கு, 7 ஆண்டு சிறை மற்றும் 15 கோடி ரூபாய் அபராதம்; ராஜசேகரனுக்கு, 7 ஆண்டு சிறை மற்றும் 1.10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மூவரும் மேல்முறையீடு செய்தனர். மனுக்கள், நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தன.விசாரணைக்குப் பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சி.பி.ஐ., தரப்பு வழக்கை நம்புவதற்கு கடினமாக உள்ளது; லண்டனில் உள்ள விடுதியில், ராமச்சந்திரனின் தயவில் தான் வங்கி அதிகாரி தியாகராஜன் தங்கியிருந்தார் என்பதை, சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்கள் நிரூபிக்கவில்லை. விடுதியில் தங்கியதற்கான கட்டணத்தை செலுத்த, அதிகாரி தியாகராஜனிடம் போதுமான பணம் இருந்தது என்பதை, மற்றொரு வங்கி உயர் அதிகாரி அளித்த வாக்குமூலம் வாயிலாக எளிதாக முடிவுக்கு வர முடிகிறது. இந்த வழக்கை, சிறப்பு நீதிமன்றம் முறையாக பரிசீலிக்கவில்லை. எனவே, சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அபராத தொகையை செலுத்தி இருந்தால், அவற்றை திருப்பி அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை