சென்னை: ''அ.தி.மு.க.,வை அழிக்க, முடக்க நினைப்பவர்களின் எண்ணம், ஒரு போதும் நிறைவேறாது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆவேசமாக பேசினார். தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவியுமான, ஜானகி அம்மாள் நுாற்றாண்டு விழா, அ.தி.மு.க., சார்பில், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது. விழாவில், பழனிசாமி பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில், எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழா, 32 மாவட்டங்களில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான திட்டங்கள் என, 562 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இன்றைய தினம், 90 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்கு நன்மைகள் கிடைத்துள்ளன. ஜானகியின் நுாற்றாண்டு விழாவை, நான் பொதுச்செயலராக இருக்கும் போது நடத்துவது, எனக்கு கிடைத்த பாக்கியம்.எம்.ஜி.ஆருக்கு சோதனைகள் வந்த போது, அவருக்கு பக்கபலமாக ஜானகி இருந்தார். எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர்., சுடப்பட்ட போது, மருத்துவமனையில் அவருடன் இருந்து, முழுமையாக சேவை செய்தார். தி.மு.க., ஆட்சியில், சட்டசபையில் எம்.ஜி.ஆர்., பேசிய போது, 'மைக்' துண்டிக்கப்பட்டது. அவர் மீது எம்.எல்.ஏ.,க்கள் செருப்பையும், புத்தகங்களையும் வீசி தாக்கினர். அவர் தொடர்ந்து பேசுகையில், 'நீங்கள் எவ்வளவு அவமானப்படுத்தினாலும் கவலைப்பட மாட்டேன், தமிழக மக்கள் பேராதரவோடு முதல்வராக வருவேன்' என்று சபதம் செய்தார். அதேபோல, முதல்வராக சட்டசபைக்குள் நுழைந்தார். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின் கட்சி பிளவு பட்டது. தேர்தல் தோல்விக்கு பின், ஜெயலலிதா, ஜானகி இருவரும் ஒருமித்த கருத்துடன் பேசி, கட்சி இணைக்கப்பட்டது. இணைந்த பின், இரண்டு இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. அ.தி.மு.க., எப்போதெல்லாம் பிரச்னையை சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் வெற்றியை ஈட்டுவது இயல்பு. அ.தி.மு.க.,வை அழிக்க, முடக்க நினைப்பவர்கள் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. எந்த ஒரு கட்சியும், தொடர்ந்து வெற்றி, தொடர்ந்து தோல்வி பெற்ற வரலாறு கிடையாது. அ.தி.மு.க., தொடர் தோல்வியை சந்திக்கிறது என்று சிலர் பேசுகின்றனர். தி.மு.க., 10 ஆண்டுகள் தொடர்ந்து தோல்வியை சந்திந்து, பின் ஆட்சிக்கு வந்தது. எனவே, காலச்சூழ்நிலை, அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப, ஆட்சி மாற்றம் ஏற்படுவது இயல்பு. அ.தி.மு.க., வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. அ.தி.மு.க.,வுக்கு உள்ளது போல, எந்த கட்சிக்கும் தொண்டர்கள், நிர்வாகிகள் கிடையாது.தி.மு.க., என்பது கருணாநிதி குடும்ப கட்சி. அந்த குடும்ப உறுப்பினர்கள் தான், கட்சி தலைமைக்கு வர முடியும். அ.தி.மு.க.,வில் யார் உழைக்கின்றனரோ, விசுவாசமாக இருக்கின்றனரோ, அவர்கள் எல்லாம் முதல்வராகலாம். தொண்டர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., ஆகலாம், அமைச்சராகலாம், பொதுச்செயலராகலாம்; முதல்வராகலாம். தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இது தான் வேறுபாடு.அ.தி.மு.க., 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் உயர, அ.தி.மு.க., ஆட்சியில் போட்ட திட்டங்கள் தான் காரணம். சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 15 மாதங்களே உள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விட்டு சென்ற பணிகள் தொடர, இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
பழம்பெரும் நடிகையர் கவுரவிப்பு