உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதை பொருள் நடமாட்டம் குற்ற உணர்வின்றி ஏமாற்றும் முதல்வர்

போதை பொருள் நடமாட்டம் குற்ற உணர்வின்றி ஏமாற்றும் முதல்வர்

சென்னை:'தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, போதையில்லா மாநிலத்தை உருவாக்க வேண்டும்' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தென் மாநிலங்களுக்கு இடையேயான சட்டம்- - ஒழுங்கு பாதுகாப்பு, நீர் மேலாண்மை குறித்த மாநாடு, அக்., 19ம் தேதி சென்னையில் நடந்தது. அதில் முதல்வர் ஸ்டாலின், 'தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது' என, பெருமையாக பேசியுள்ளார்.அக்கூட்டத்தில் பங்கேற்ற தென் மாநிலங்களின் டி.ஜி.பி.,க்களிடம், அவர்களது மாநிலங்களின் வழியாக, தமிழகத்திற்கு கடத்தப்படும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை தடுக்க, தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வேண்டுகோளை ஸ்டாலின் அறிவுறுத்தவில்லை.வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு, தங்கு தடையின்றி கஞ்சா கடத்தி வரப்படுகிறது. பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா, மெத்தாம்பேட்டமைன் போன்ற பல்வேறு போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.தமிழகம் போதைப் பொருட்கள் கடத்தலின் கேந்திரமாக விளங்குவது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற கடத்தல்களில், தி.மு.க., அயலக அணி நிர்வாகியாக இருந்து கைதான ஜாபர் சாதிக் கூட்டாளிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.பல கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன், கடந்த 2021-ல் 4 கிலோ பிடிபட்ட நிலையில், கடந்த 2023ல் 26 கிலோவிற்கு மேல் பிடிபட்டுள்ளது. இதுவரை கேள்விப்படாத, 'மெத்தகுவலான்' என்ற போதைப்பொருள், 2023ல், 8 கிலோ பிடிபட்டுள்ளது.ஹசீஸ் என்ற போதைப்பொருள், 2024- ஆகஸ்ட் வரை 77 கிலோ பிடிபட்டுள்ளது. போதை மாத்திரைகள், 36,500 பிடிபட்டுள்ளதாகவும் டி.ஜி.பி., தெரிவித்துள்ளார்.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதை, டி.ஜி.பி.,யே தன் அறிக்கையில்ஒப்புக்கொண்டுள்ளார். இதை மறந்த முதல்வர் ஸ்டாலின், எந்தவித குற்ற உணர்வும் இன்றி, தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என, தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்.போலீஸ் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ