மாவட்டத்திற்கு 10 பேருக்கு மாதந்தோறும் பயங்கரவாத பயிற்சி
சென்னை : 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர் பயங்கரவாத அமைப்புக்கு, தமிழக செயலர் என்ற நிலையில் இருந்து, ஆட்களை சேர்த்து மூளைச்சலவை செய்து வந்தேன்' என, என்.ஐ.ஏ., விசாரணையில் பைசல் ஹுசைன் வாக்குமூலம் அளித்துள்ளார்.தடை செய்யப்பட்ட, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்து, ரகசிய பயிற்சி வகுப்பு நடத்தியது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த, அண்ணா பல்கலை முன்னாள் கவுரவ பேராசிரியர் ஹமீது உசேன் உட்பட ஏழு பேரை, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.அவர்களில், சென்னை தரமணியைச் சேர்ந்த பைசல் ஹுசைன், ராயப்பேட்டை ஹமீது உசேன், செங்கல்பட்டு மாவட்டம், செம்பாக்கம் முகமது மவுரிஸ் ஆகியோரை, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் பைசல் ஹுசைன் அளித்துள்ள வாக்குமூலம்:
ராயப்பேட்டையில், ஹமீது உசேன், அவரது தந்தை ஆகியோர் நடத்தி வந்த ரகசிய பயிற்சி வகுப்பில் தொடர்ந்து பங்கேற்பேன். ஹிஸ்ப் உத் தஹ்ரீர் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க, என்னை தமிழகத்தின் செயலராக நியமித்து இருந்தனர். மார்க்க நெறி பரப்புதல் என, மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க, மூளைச்சலவை செய்து வந்தேன்.ஓராண்டில் அதிகபட்சம் நான்கு மாதம் மட்டுமே வீட்டில் இருப்பேன். தமிழகத்தை நான்கு மண்டலமாக பிரித்து, நிர்வாகிகளை நியமனம் செய்தோம். மாதந்தோறும் மாவட்டத்திற்கு 10 பேர் என, கோவை அரபி கல்லுாரிக்கு அழைத்துச் சென்று, பயங்கரவாத பயிற்சி அளித்தோம். சில முக்கிய புள்ளிகளிடம் நிதியும் பெற்று வந்தோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.