உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் கமிஷனுக்கு நீதித்துறை அதிகாரம் உண்டு பழனிசாமி வழக்கில் வெளிவந்தது உண்மை

தேர்தல் கமிஷனுக்கு நீதித்துறை அதிகாரம் உண்டு பழனிசாமி வழக்கில் வெளிவந்தது உண்மை

சென்னை:'சுதந்திரமான அரசியல் சட்ட அமைப்பான தேர்தல் கமிஷனுக்கு, நீதித்துறை அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது' என, தலைமை தேர்தல் கமிஷன் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.'அ.தி.மு.க., பொதுச் செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது; அ.தி.மு.க., விதிகளில் திருத்தம் செய்தது செல்லாது' என, அக்கட்சி முன்னாள் எம்.பி.,க்கள் கே.சி.பழனிசாமி, ரவீந்திரநாத், புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர், தலைமை தேர்தல் கமிஷனுக்கு மனுக்கள் அனுப்பியிருந்தனர்.

மனு தாக்கல்

அது தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில், கே.சி.பழனிசாமி உள்ளிட்டோரின் மனுக்களை, தேர்தல் கமிஷன் விசாரிக்க தடை கேட்டு, உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:நீதித் துறைக்கு இணையான விசாரணையை தேர்தல் கமிஷன் நடத்துகிறது. அரசியல் கட்சிகளின் உள்விவகாரத்தில் தேர்தல் கமிஷன் ஓரளவுதான் தலையிட முடியும்; எல்லா விவகாரத்திலும் தலையிட முடியாது.

விசாரணை

மேலும், புகார் அளித்தவர்கள், அ.தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இல்லை. கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்களின் புகார்கள் மீது, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த முடியாது.கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் கொடுத்த புகார்கள் குறித்து பதில் அளிக்குமாறு, கடந்தாண்டு டிசம்பர் 24ல் தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிர மணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரிக்க, இடைக்கால தடை விதித்தது; தேர்தல் கமிஷன் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.அதன்படி, இந்திய தேர்தல் கமிஷன் சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தாக்கல் செய்துள்ள பதில் மனு:அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பாக, ஆறு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றை ஒன்றாக பரிசீலித்து முடிவெடுக்கும் வகையில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் வழக்குகளில், டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில், அவர்களின் புகார்களும் சேர்த்து விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன.சுதந்திரமான, அரசியல் சட்ட அமைப்பான தேர்தல் கமிஷனுக்கு, நீதித் துறை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. புகார்கள் குறித்து பதிலளிக்கும்படி, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியதன் வாயிலாக, எந்த அதிகார வரம்பு மீறலிலும் ஈடுபடவில்லை. எனவே, பழனிசாமியின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.விசாரணையை, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி,குமரப்பன் அடங்கிய அமர்வு, வரும் 6ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை