வெளியிட வேண்டாம் என்ற அப்பாவு தானே வெளியிட்டார் பேட்டியில்!
சென்னை : ''கவர்னர் மாளிகையில் விதிமீறல், சட்டமீறல் கைவந்த கலையாக உள்ளது,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சபைக்கு கருப்பு, 'பேட்ஜ்' அணிந்து, பதாகைகள் ஏந்தி வந்தனர்.அண்ணா பல்கலை வேந்தரான கவர்னர் பேச எழுந்தபோது, அவர்கள் பதாகைகளை காண்பித்தனர். கவர்னர் உரைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், கலவர நோக்கத்தோடு செயல்பட்டதால், அவர்களை வெளியேற்றினோம். கவர்னர் தன் ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்க வேண்டும். அவர் செய்யாதது தவறு என, சபையில் கண்டித்துள்ளோம். எந்த கவர்னரும், இப்படிப்பட்ட பிரச்னையை உருவாக்கியது இல்லை. கடந்த, 1995ல் முன்னாள் கவர்னர் சென்னா ரெட்டியை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என, ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார்.கடந்த, 1996 பிப்ரவரியில் கவர்னர் உரையாற்றினார். கவர்னர் உரை நடந்த நாள், சட்டசபை கூட்ட நாளாக கருத முடியாது. அவர்கள் வாசித்து செல்ல மட்டும் உரிமை வழங்கப்பட்டுள்ளது; கருத்து கூற உரிமை கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தான் கருத்து கூற முடியும்.கவர்னர், இதை சாக்குப்போக்காக சொல்கிறார். கவர்னர் உரையை வாசிக்க விருப்பம் இல்லாமல், அப்படி செய்கிறார் என்று தெரிந்து கொண்டேன். அமைச்சரவை தயாரித்த உரை கவர்னருக்கு வழங்கப்படும். முதல் கூட்டத்திற்கு அவர் சம்பிரதாயப்படி வர வேண்டும். கூட்டத்திற்கு அனுமதி அவர் தான் தந்துள்ளார். அவரை அழைக்க சென்ற போது, நன்கு உபசரித்தார். எந்த கருத்து முரண்பாடுகளும் கிடையாது. கவர்னருக்கு நாங்கள் உரிய மரியாதை கொடுத்தோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக, கவர்னர் செயல்படுவது நியாயமா என்பதை, நீங்கள்தான் கூற வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து எல்லா நிகழ்ச்சிகளிலும் பாடப்படுகிறது; மரபை மாற்ற முடியாது. அடுத்த முறை இதே கவர்னர் இருந்தாலும், இதே நடைமுறை தான் பின்பற்றப்படும்.கவர்னர் மாளிகையில் விதிமீறல், சட்டமீறல் கைவந்த கலையாக உள்ளது. இந்தியாவில் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இந்த பிரச்னை உள்ளதா? தமிழகத்தில் கொள்கை ரீதியிலான ஆட்சி உள்ளதால், திட்டமிட்டு செய்கின்றனரா என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.சட்டசபையில் சபாநாயகர்அப்பாவு பேசுகையில், ''பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள், அச்சிடப்பட்ட தமிழ், ஆங்கில உரையை தவிர, வேறு எந்த செய்திகளையும் சட்டசபை சார்பில் நடந்ததாக அறிவிக்கக்கூடாது,'' என்று உத்தரவிட்டார். சட்டசபை முடிந்து செய்தியாளர்களை அவர் சந்தித்த போது, அவரே சபையில் நடந்த நிகழ்வுகளை தெரிவித்தார்.அப்பாவு, சபாநாயகர்
உரையை மட்டும் வெளியிடலாம்
சட்டசபை உறுப்பினர்களுக்கு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட, கவர்னர் உரையின் ஆங்கிலம், தமிழில் அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டும் சபைக்குறிப்பில் இடம்பெறும்; வேறு எதுவும் இடம் பெறாது. பத்திரிகைகள், ஊடகங்கள், அச்சிடப்பட்ட தமிழ், ஆங்கில உரையை தவிர, வேறு எந்த செய்திகளையும் சட்டசபை சார்பில் நடந்ததாக அறிவிக்கக் கூடாது. மேலும், 2024 பிப்., 12ல் தேசிய கீதம் இசைத்தல் தொடர்பாக, கவர்னர் கடிதம் எழுதி, அந்த பிரச்னை ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்டது. கவர்னர் உரை என்பது அரசியலமைப்பு சட்டப்படி, அவருக்கு உள்ள கடமை. அந்த கடமையை நிறைவேற்ற, கவர்னர் சபைக்கு வந்தார். இந்த சபை, எப்போதும் மரபுகளை மதித்து பின்பற்றி வருகிறது. அந்த வகையில், கவர்னர் உரையின் துவக்கத்திற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து, நிகழ்வுக்கு பின் தேசிய கீதம் பாடப்படுகிறது.
11ம் தேதி வரை சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபை நிகழ்வு நேற்று முடிந்ததும், சபாநாயகர் அப்பாவு தலைமையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. அதில், வரும் 11ம் தேதி வரை, சட்டசபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மறைந்த எம்.எல்.ஏ., இளங்கோவன், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் மறைவுக்கு இன்று சட்டசபையில் இரங்கல் தெரிவித்து, சபை ஒத்தி வைக்கப்படும்.நாளை முதல், 10ம் தேதி வரை, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, விவாதம் நடக்கும். வரும், 11ம் தேதி விவாதத்திற்கு, முதல்வர் பதில் அளிப்பார். அன்று சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். தினமும் காலை, 9:30 மணிக்கு சட்டசபை கூடும்.