உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழுக்கு தினமும் ஒரு மலர் தந்த மகான் டி.வி.ராமசுப்பையர்

தமிழுக்கு தினமும் ஒரு மலர் தந்த மகான் டி.வி.ராமசுப்பையர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தாய் மொழி கல்வியின் அவசியம் பற்றி, தற்போது அதிகம் பேசுகிறோம். குழந்தைகள் ஆரம்ப கல்வியில் தமிழை கற்க வேண்டும்; ரஷ்யாவிலும், ஜப்பானிலும், சீனாவிலும் இருப்பதை போல மருத்துவம், பொறியியல் படிப்புகள், தாய்மொழி தமிழில் சிறக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.இதை தீர்க்க தரிசனமாக, தொலைநோக்கு பார்வையுடன், 75 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியும், பேசியும் வந்தவர், டி.வி.ஆர்., என அழைக்கப்படும், 'தினமலர்' நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i5pgyw8b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இணைந்திருந்த அன்றைய நாஞ்சில் நாடான, இன்றைய குமரி மாவட்டத்தை, தாய் தமிழகத்தோடு இணைக்கும் போராட்டத்திற்காக பத்திரிகை துவங்கி, அந்த லட்சியத்தை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியவர் டி.வி.ஆர்.,குமரி மாவட்டம் உருவான வரலாற்றில், டி.வி.ஆர்., பெயர் என்றும் நீங்காது நிலைத்திருக்கும். அதே நேரத்தில், ஆழ்ந்த தமிழுணர்வு மிக்க டி.வி.ஆர்., தமிழும் தமிழனும் ஒரு சேர தலைநிமிர்ந்து முன்னேற வேண்டும் என்ற கொள்கையோடு எழுத்தால் போராடியவர் என்பதை, தமிழ் வரலாற்றின் பக்கங்கள் வசதியாக மறந்து விட்டது வருத்தமான விஷயமே.அவர் படைப்பிலக்கியவாதி அல்லாமல் இருக்கலாம்; ஆனால் தமிழுக்காக, தமிழருக்காக ஒரு பத்திரிகையை படைத்தவர் என்பதை பத்திரிகை உலகம் மறக்காது!

போராட ஒரு நாளிதழ்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர், மலையாளம் ஆதிக்கம் செலுத்திய திருவனந்தபுரத்தில், ஒரு தமிழ் நாளிதழை துவங்கும் துணிச்சல் யாருக்கு வரும்? ஆனால், அவருக்கு இருந்தது. அங்கிருந்து நாளிதழ் வெளிவந்தால், தமிழர்களின் போராட்டக்குரல் ஆட்சியாளர்களுக்கு எளிதில் கேட்கும் என்று எண்ணினார்.நாளிதழ் துவக்க விழாவிற்கு திருவிதாங்கூர் சமஸ்தான முதல்வர் கேசவனை அழைத்த போது, 'மலையாள மண்ணில் தமிழ் பத்திரிகையா?' என, அவர் பங்கேற்க மறுத்து விட்டார். பின்னர், தமிழறிஞர் வையாபுரி பிள்ளை தலைமையில் நாளிதழ் வெளியிடப்பட்டது.தன் ரத்தத்தில் ஊறியிருந்த தமிழ்ப்பற்றை நாளிதழுக்கு பெயர் வைப்பதிலும் உறுதிபட காட்டினார் டி.வி.ஆர்., யாரிடமும் யோசிக்கவில்லை. நேராக அவருடைய தமிழாசிரியர் தசாவதானி ஆறுமுகம் பிள்ளையை சந்தித்து யோசனை கேட்டார்.இதுகுறித்து டி.வி.ஆர்., ஒருமுறை... 'பொன்மலர் என பெயர் வைக்கலாம் என்று தமிழாசிரியர் கூறினார். ஆனால், நாளிதழ் என்பது பெயரிலேயே இருக்க வேண்டும் என்பதால் தான் தினமலர் என்று பெயரிட்டேன்' என, குறிப்பிட்டுள்ளார். -எவ்வளவு தீர்க்கதரிசனம்; எவ்வளவு தமிழ்ப்பற்று இருந்தால் இப்படி பெயர் வைத்திருப்பார்.

தினமும் மலர்வது

'மலர்' என்பது அழகான துாய தமிழ் வார்த்தை. கம்பனும், வள்ளுவனும் வாக்கியங்களுக்குள் கலந்து வைத்து விளையாடிய வார்த்தை 'மலர்!' அது 'தினமும் மலர்வது' என பெயரால் உணர்த்தப்பட வேண்டும் என, தீர்க்கமாக சிந்தித்திருக்கிறார். எழுத்திலும், பேச்சிலும் பிறமொழி கலப்பு அதிகமாக இருந்த அன்றைய காலகட்டத்தில், சில பத்திரிகைகளே துாய தமிழ் பெயரில் வந்து கொண்டிருந்தன என்பது இங்கு கவனிக்கத்தக்கது.மலர் மலர்ந்த பிறகு தினமலர் நாளிதழ் மட்டுமல்ல, பிற பத்திரிகைகளும் தங்களது இணைப்பு பக்கங்களில், மலர் என்ற வார்த்தையை சேர்க்க தவறவில்லை. மகாகவி பாரதியார் காலத்தில் இதழியலில் பத்திரிகை, சஞ்சிகை என்ற வார்த்தைகளே அதிகம் புழங்கிக் கொண்டிருந்தன. மலரில் இதழ்கள் இருப்பது போல, பிற்காலத்தில் நாளிதழ் என்ற அருமையான சொல்லிற்கும் மலர் ஒரு காரணமாயிற்று போலும்!

தமிழ்வழி கல்வி

அன்றைய நாஞ்சில் நாட்டு மக்கள் தமிழை தாய்மொழியாக கொண்டிருந்தாலும், அது மலையாள நாட்டோடு இணைந்திருந்ததால், மலையாள வழியில் கல்வி கற்றனர். ஆரம்ப பள்ளிகளில் கூட தமிழ் மொழி அவ்வளவாக இல்லை.இந்த நிலை மாற வேண்டும் என்று நினைத்த டி.வி.ஆர்., தமிழ் வழி பள்ளிகளின் அவசியம் குறித்து செய்திகள் வெளியிட்டார். திவான் சர்.சி.பி.ராமசாமி ஐயர் கொண்டு வந்த கட்டாய கல்வி திட்டத்திற்கு அனைத்து உதவிகளும் செய்து, புதிய பள்ளிகள் நிறுவ காரணமானார்.குமரி மாவட்டம், தாய்த்தமிழகத்தோடு இணைந்த பிறகு, அம்மாவட்ட மக்கள் முழுமையாக தமிழ் கல்விக்கு மாற வேண்டும்; தமிழ் எழுத்தாளர்களும் அங்கு கவனம் செலுத்த வேண்டும்; அங்கிருந்து படைப்பாளிகள் உருவாக வேண்டும் என்பதற்காக, தமிழ் எழுத்தாளர்களின் மாநில மாநாட்டை நாகர்கோவிலில், 1958ல் நடத்தினார் டி.வி.ஆர்.,அந்த மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவராக இருந்த டி.வி.ஆர்., நிகழ்த்திய உரை, தமிழுலகில் பொன்னெழுத்துக்களால் வரையப்பட வேண்டிய பொக்கிஷம்.

அதில் சில வரிகள்...

'தமிழ் எழுத்தாளர்கள், பாரதத்தின் இதர மொழி எழுத்தாளர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. புதிய படைப்பில், மொழி பெயர்ப்பில், தழுவலில் தமிழ் வேகமாக முன்னேறி வருகிறது. உலகமொழிகளை கற்றுக்கொண்டு அவற்றின் சாரத்தை தமிழில் கொண்டு வர வேண்டும்.'விஞ்ஞானத்தில், ஆங்கிலத்தை விட ரஷ்ய மொழி முன்னேறி விட்டது. ரஷ்ய மொழியை கற்று விஞ்ஞான அறிவை தமிழில் வளர்க்க வேண்டும். வடமொழியில் எத்தனையோ தமிழ்ச்சொற்கள் உள்ளன. தமிழை உலகப்பெருமொழிகளில் ஒன்றென ஆக்குவது நம் கடமை!' - தினமலர், ஜூன் 1, 1958.'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்இறவாத புகழுடைய புதுநுால்கள்தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்'என்ற மகாகவி பாரதியின் வார்த்தைகளுக்கு வலு சேர்ப்பதாக டி.வி.ஆரின் சிந்தனையும், எழுத்தும், பேச்சும் இருந்தன.தமிழர்கள் கட்டாயம் தமிழை கற்க வேண்டும் என விரும்பிய டி.வி.ஆர்., அதே நேரத்தில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மொழிகளை தெரிந்து கொள்வது அவசியம் என்று எப்போதும் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு என்று தனிப்பெயர்

மெட்ராஸ் மாநிலம், 1968ல் அண்ணாதுரை முதல்வராக இருந்த போது, 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் பெற்றது. இதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே, தமிழர்களின் கலை, பண்பாடு, கலாசாரம் முன்னேற தமிழ்நாடு என தனிப்பெயர் வேண்டும் என்று தொடர்ந்து எழுதியவர் டி.வி.ஆர்.,தினமலர் நாளிதழ் தலையங்கத்தில், 1958ல் டி.வி.ஆர்., எழுதியது...'அரசு அலுவல் மொழி, தமிழாக மாறிவரும் இக்கட்டத்தில், மாநிலத்தின் பெயரை மட்டும் 'தமிழ்நாடு' என்று மாற்றாமல் இருப்பதில் என்ன நியாயம். தமிழ்நாடு என்று பெயர் ஏற்படும் போது தான் தமிழர்களுக்கும், தமிழுக்கும் இயற்கையான பெருமிதம் ஏற்பட முடியும். அரசு இனியும் வீண் சடங்குகளுக்கு வழி வகுக்காமல், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கு முன்வருமா' என்றார்.

தமிழ் ஆர்வலர்

டி.வி.ஆர்., தேசபக்தி மிக்கவர்; தேசவிரோத சக்திகளை துணிச்சலோடு எதிர்த்தவர். ஒருமைப்பாட்டு உணர்வோடு ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சிந்தனைவாதியாக திகழ்ந்தவர். என்றாலும் தாய்மொழி என வரும் போது, தன்னிகரில்லா தமிழ் ஆர்வலராக வாழ்ந்து, தன் நாளிதழ் மூலம் தமிழ் வளர்த்தார் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் மறக்கலாகாது!தமிழுக்கு தினமும் ஒரு 'மலர்' தந்த மகான் டி.வி.ஆர்., நினைவு தினம் இன்று, ஜூலை 21.

ஜி.வி.ரமேஷ் குமார், பத்திரிகையாளர்

dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

SUNDHAR RAJ
ஜூலை 21, 2025 22:01

நான் விரும்பி படிக்கும் நாளிதழ்


மூர்க்கன்
ஜூலை 21, 2025 12:12

சபாஷ் தமிழகம் என்ற பெயரே சரி??


SUBBU,MADURAI
ஜூலை 21, 2025 13:42

ஓஹோ சபாஷ்


Ramanujadasan
ஜூலை 21, 2025 11:05

நாட்டுக்கும் மக்களுக்கும், மொழிக்கும் ஒன்றுமே செய்யாமல், தளபதி எனவும் முத்தமிழ் அறிஞர் எனவும், பேரறிஞர் என்றும், பெரியார் எனவும் தமிழர் தந்தை எனவும் தமக்கு தாமே பட்டம் சூட்டி கொண்டு, துரோகம் பல செய்து, மக்களை ஏமாற்றி பிழைக்கும் எத்தர்கள் மத்தியில், உண்மையாக தொண்டு செய்த மஹான்களில் ஒருவர் ராமசுப்பையர் அவர்கள். தமிழர்கள் உண்மையில் கடன் பட்டு இருப்பது தமிழகத்தில் இந்த பத்திரிகைக்கு மட்டுமே


Ramanujadasan
ஜூலை 21, 2025 11:01

தி ஹிந்து, ஆனந்த விகடன், கல்கி போன்ற பல பத்திரிகைகள் மத்தியில் தேசியம் தெய்வீகம் இரண்டையும் போற்றி பாதுகாக்கும் தினமலர் பத்திரிகை வாழ்க, அதன் நிறுவனரும், அவரின் வாரிசுகளும் பல்லாண்டு வாழ்க, தேசியத்தின் பாதுகாவலராக .


sekar ng
ஜூலை 21, 2025 10:32

குமரியை தமிழகத்தோடு இணைக்க பாடு பட்டவர், உண்மை செய்திகளையும் தேச பக்தியும் வளர்த்த மஹான் வாழ்க


Venkadesh Raja
ஜூலை 21, 2025 10:15

நெல்லை, குமரி மக்களுக்காக அயராது பாடுபட்ட ஐயா டி.வி.ஆர்.க்கு மனதார அஞ்சலி செலுத்துகிறேன். அவர் நிறுவிய தினமலர் பத்திரிகை இன்று மக்களுக்காக பணியாற்றி வருகிறது. அது குறித்து ஒரு சில வரிகளில் பெருமையாக கூறியே ஆக வேண்டும். உண்மையுடன் துல்லியமாக செய்தி வெளியிடும் தினமலர் நிறுவனம் மற்றும் அதனை வழிநடத்த அயராது உழைக்கும் எடிட்டர் உள்ளிட்டோருக்கு மிக்க நன்றி, குறிப்பாக திருநெல்வேலி மக்கள் மனதில் இருந்து ஐயா டி.வி.ஆரின் சிறப்புமிக்க பணிகள் மற்றும் நினைவுகளை அகற்ற முடியாது, ஐயாவுக்கு மீண்டும் நன்றிகள் பல...


V RAMASWAMY
ஜூலை 21, 2025 09:48

அரசியல் காழ்ப்பு காரணமாக இம்மாதிரி தமிழ் வளர்த்த பலப்பல அந்தணர்களின் புகழ் இருட்டடிப்பு செய்துவிட்ட பரிதாப நிலை தமிழகத்தின் தலைவிதி.


sankar
ஜூலை 21, 2025 09:46

நான் 50 வருடங்கள் தினமலர் வாசகன் என்று சொல்வதை விட ,ரசிகன் என்று சொல்லலாம் .. எனக்கு தெரிந்து T V R விட சிறந்த ஒரு பத்திரிக்கையாளரை ,எனது 75 வயதில் கண்டதில்லை ..வாழ்க T V R புகழ்


MUTHUKUMARAN
ஜூலை 21, 2025 09:21

சூப்பர் , அருமையான கட்டுரை, தமிழுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் அய்யா டி.வி.ஆர்., அவர்கள் அரும் பெரும் தொண்டாற்றி உள்ளார் . அவரது சேவை அளப்பரியது. அடிமட்ட மக்களின் தேவைகள் நிறைவேற வேண்டும், எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவராக வாழ்ந்துள்ளார் டி.வி.ஆர்., அவரது நினைவு நாளில் போற்றுவோம் அவரது புகழை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை