உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாயின் உடலை சைக்கிளில் கட்டி 18 கி.மீ., எடுத்துச்சென்ற மகன் நெல்லையில் கண்கலங்க வைத்த சம்பவம்

தாயின் உடலை சைக்கிளில் கட்டி 18 கி.மீ., எடுத்துச்சென்ற மகன் நெல்லையில் கண்கலங்க வைத்த சம்பவம்

திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், இறக்கும் தருவாயில் வெளியே அனுப்பப்பட்டு இறந்த, 65 வயது தாயின் உடலை, 18 கி.மீ., சைக்கிளில் கட்டி மகன் எடுத்துச் சென்றது காண்போரை கண் கலங்க வைத்தது.திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வடக்கு மீனவன் குளத்தைச் சேர்ந்தவர் சிவகாமியம்மாள், 65. இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் சவரிமுத்து கீழக்கடையத்தில் வசிக்கிறார். இரண்டாவது மகன் செல்வம் இறந்து விட்டார். மூன்றாவது மகன் பாலன், 38, தாயை கவனித்து வந்தார்.

மனநலம் பாதிப்பு

சிவகாமிக்கு தீவிர மனச்சிதைவு இருந்தது. இதற்காக அடிக்கடி அவரை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பாலன் சைக்கிளில் வைத்து அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். பாலனுக்கும் ஒரு விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன் சிவகாமியம்மாளை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்நோயாளியாக பாலன் அனுமதித்திருந்தார். நேற்று முன்தினம் காலையில், அவரது உடல்நிலை மோசமானது. இதனால், வேறு உறவினரை அழைத்து வரும்படி, மருத்துவமனை ஊழியர்கள் பாலனிடம் கூறினர். உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் அவர் தவித்தார்.இறக்கும் தருவாயில் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட தாய் சிவகாமியம்மாளுக்கு, அருகே உள்ள ஒரு கோவில் வளாகத்தில் பாலன் காபி வாங்கிக் கொடுத்தார். அப்போதே, அவரால் காபியை உட்கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் அங்கேயே இறந்தார். காலை, 11:00 மணிக்கு இறந்த தாயின் உடலை என்ன செய்வதென தெரியாத பாலன், பகல் முழுதும் கோவில் வளாகத்திலேயே இருந்தார். மாலையில் தன் சைக்கிளின் பின் கேரியரில் தாயின் உடலை கயிற்றால் கட்டி, உருட்டியபடியே ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.திருநெல்வேலி - -கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் மூன்றடைப்பு பகுதியில் இரவு, 10:00 மணிக்கு மூதாட்டி உடலுடன் சைக்கிளில் அவர் செல்வதை பார்த்தவர்கள் கண் கலங்கினர்; சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஒப்படைப்பு

விரைந்து சென்ற போலீசார், மூன்றடைப்பில் அவரை வழிமறித்து விசாரித்தனர். சிவகாமியம்மாள் இறந்ததை உறுதி செய்த போலீசார், வாகனம் வாயிலாக அவரது உடலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பிரேத பரிசோதனைக்குப் பின் நேற்று, தாயின் உடல் பாலன், அவரது அண்ணன் சவரிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது.பாலனுக்கு மனநல பாதிப்பு இருப்பதால், யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. வறுமையிலும் இருந்தார். வீட்டுக்கு உடலை கொண்டு செல்வதில் குறியாக இருந்தவர், திருநெல்வேலியில் இருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில், 18 கி.மீ., சைக்கிள் பின் கேரியரில் கட்டி வைத்து உருட்டியபடியே சென்றார்.மருத்துவமனை டீன் ரேவதி கூறுகையில், ''பாலன் தாயை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக பிடிவாதத்துடன் கேட்டபோது எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே அவரை அனுப்பி வைத்தோம். அவர் இறந்தது எங்களுக்கு உடனடியாக தெரியவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Pushpa Gokul
ஜன 31, 2025 21:16

108 amplulance என்ன ஆச்சு


netrikannan
ஜன 25, 2025 09:02

பொய் சொல்லுதல் பாவம் .


R.RAMACHANDRAN
ஜன 25, 2025 07:53

வாய்மையே வெல்லும் என்பது பெயரளவில் தான் உள்ளது.அரசு ஊழியர்கள் பொய் சொல்லி தப்பித்துக் கொள்வதிலேயே குறியாக உள்ளனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை