மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, சத்தியமூர்த்தி மேட்டு தெருவை சேர்ந்தவர் சேகர். இவர், மன்னார்குடி நகராட்சியில், துாய்மை பணியாளராக பணியாற்றி இறந்து விட்டார். இவரது மனைவி செல்வி. இவர்களது ஒரே மகள் துர்கா, 28. இவர், மன்னார்குடி அரசினர் கலைக் கல்லுாரியில், இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றார்.கடந்த 2015-ல், நிர்மல் குமார் என்பவரை, துர்கா திருமணம் செய்து கொண்டார். நிர்மல் குமார், அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிகிறார். இந்நிலையில், துர்காவின், அரசு வேலை கனவை அறிந்த நிர்மல்குமார், அரசு தேர்வு எழுத துர்காவிற்கு ஊக்கமளித்தார்.இதையடுத்து, 2022ல், குரூப் 2 தேர்வு எழுதி, முதல்நிலை, முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2024ல், நடைபெற்ற நேர்முகத் தேர்வில், 30க்கு 30 மதிப்பெண்கள் பெற்று, ஆணையராக தேர்ச்சி பெற்றார். அவருக்கு, பணி நியமன ஆணையை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து, அவர் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக நேற்று பொறுப்பேற்றார். பின், திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீயை, சந்தித்து வாழ்த்து பெற்றார்.