உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆக்கிரமிப்பாளர்கள் 86,000 பேருக்கு பட்டா

ஆக்கிரமிப்பாளர்கள் 86,000 பேருக்கு பட்டா

சென்னை: ''சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், 'பெல்ட் ஏரியா'வில் வசிக்கும் மக்களுக்கு, ஆறு மாதங்களுக்குள் பட்டா வழங்கப்பட உள்ளது,'' என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கூறினார்.தமிழக அமைச்சரவை கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். காலை 10:55 மணிக்கு துவங்கிய கூட்டம், பகல் 12:05க்கு நிறைவடைந்தது. கூட்டத்தில், தமிழக அரசின், 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்தும், பல்வேறு தொழில் நிறுவனங்கள், தொழில் துவங்க அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், ஆட்சேபனை இல்லாத நிலத்தில் நீண்ட காலமாக குடியிருந்து வருவோருக்கு, பட்டா வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ., - எஸ்.எஸ்.பாலாஜி, இப்பிரச்னை குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில், அரசு நிலம், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், எதிர்கால தேவை கருதியும், 532 வருவாய் கிராமங்கள், 'பெல்ட் ஏரியா' என வரையறுக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து, 32 கி.மீ., சுற்றளவுக்குள் வரும் பகுதிகள், இதில் சேர்க்கப்பட்டன. இதில், பட்டியலிடப்பட்ட கிராமங்களில், அரசுக்கு தேவைப்படும் நிலங்கள், நீர் நிலைகள் தவிர்த்து, ஆட்சேபனை இல்லாத நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது என, நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இது குறித்து, அமைச்சரவை கூட்டத்திற்கு பின், அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:சென்னையை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில், பெல்ட் ஏரியா எனப்படும் பகுதிகளில், ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாத நிலை இருந்தது. இந்த இடங்களில் வசிப்பவர்களுக்கு, தேவையான வசதிகளை செய்ய முடியாத நிலைமையும் இருந்தது. இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், நான்கு மாவட்ட பெல்ட் ஏரியா பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 29,187 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருக்கின்றனர். இவர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் பட்டா வழங்கும்படி முதல்வர் கூறியுள்ளார். இப்பணிகளை மேற்கொள்ள, மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து, பணிகள் விரைவுபடுத்தப்பட உள்ளன. மதுரை, திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் இதே போன்ற பிரச்னை இருக்கிறது. அங்கு, ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருக்கும் 57,084 பேருக்கும் பட்டா வழங்கப்படவுள்ளது.அதாவது, 86,000 பேருக்கு பட்டா வழங்கும் முடிவு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டு உள்ளது. விடுபட்ட மனுக்கள் மீதும் பரிசீலனை செய்யப்பட உள்ளது. கடந்த 1962ம் ஆண்டு துவங்கிய பிரச்னை, இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி