உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்பு உருவாக்க ரூ.3,500 கோடியில் திட்டம் தயாரிப்பு

தமிழகத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்பு உருவாக்க ரூ.3,500 கோடியில் திட்டம் தயாரிப்பு

தஞ்சாவூர்:தஞ்சாவூர் தமிழ் பல்கலையில், மத்திய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் பல்கலை நிர்வாகம் சார்பில், நீடித்த நிலத்தடி நீர் ஆதாரங்கள் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில், பங்கேற்ற மத்திய நிலத்தடி நீர் வாரிய தென் கிழக்கு கடலோர மண்டல இயக்குநர் சிவகுமார் அளித்த பேட்டி:தமிழகத்தில், நிலத்தடி நீர், 30 சதவீதம் பாதுகாப்பான நிலையிலும், 70 சதவீதம் குறைந்த அளவிலான பயன்பாடு, பயன்படுத்த முடியாத நிலை என, 246 வட்டாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.தமிழகத்தில், 80 சதவீத தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. நெல் சாகுபடியில் ஒரு போகத்துக்கு, 1.5 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேவைப்படும். இதை தவிர்க்க தெளிப்பு நீர் பாசனம், சொட்டு நீர் பாசனம் போன்ற வகைகளில் நெறிப்படுத்தினால், நிலத்தடி நீர் நீடித்திருக்கும். இதை தமிழக அரசு செய்ய வேண்டும்.தமிழகம் உட்பட நாடு முழுதும், மத்திய அரசு ஒருங்கிணைந்த நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதை வெற்றிகரமாக செயல்படுத்தினால், வளமான தமிழகத்தை உருவாக்க முடியும். தமிழகத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்பை ஏற்படுத்த, 3,500 கோடி ரூபாயில், பெரும் திட்டத்தை மத்திய நிலத்தடி நீர் வாரியம் தயாரித்து வருகிறது.நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுதலை தடுக்க, ஆழ்குழாயில் தானியங்கி நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால், நிலத்தடி நீரில் உவர் நீர் இருப்பதை அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முடிகிறது. தமிழகத்தில் தற்போது, 1,000 இடங்களில் இக்கருவி அமைக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் கடலில் இருந்து, 5 கி.மீ., தொலைவுக்குள் நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுந்துஉள்ளது. இதை தடுப்பதற்கு, 100 மீட்டர் ஆழத்துக்குள் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுக்க வேண்டாம் என்றும், 100 மீட்டருக்கும் அதிகமான ஆழத்துக்கு சென்று தண்ணீர் எடுக்குமாறும் அறிவுரை வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

என்னென்ன பணிகள்?

நிலத்தடி நீரை செறிவூட்ட சிறிய குளங்கள் உருவாக்குதல், ஆறுகளில் தடுப்பணைகள் அமைத்தல், விவசாயிகளுடன் இணைந்து பண்ணை குட்டை அமைத்தல், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மேம்படுத்துதல், ஓடைகளில் செயற்கை தொட்டி அமைத்தல் போன்ற பல்வேறு கட்டமைப்புகளை செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி