உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அலைக்கழிக்கும் சார் - பதிவாளர்கள்: உயர் அதிகாரிகள் ரெய்டால் கலக்கம்

அலைக்கழிக்கும் சார் - பதிவாளர்கள்: உயர் அதிகாரிகள் ரெய்டால் கலக்கம்

சென்னை : பத்திரப்பதிவு முடிந்த நிலையில், பத்திரங்களை திருப்பி தராமல், பொதுமக்களை அலைக்கழிக்கும் சார் - பதிவாளர்கள், உயர் அதிகாரிகளின் திடீர் ரெய்டால் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் வீடு, மனை விற்பனை தொடர்பான பத்திரங்களை, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகங்களில், பொதுமக்கள் பதிவுக்கு தாக்கல் செய்கின்றனர். இதில் கட்டணங்கள், சொத்து மதிப்பு, வகைப்பாடு விபரங்களை சரி பார்த்து, பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதன்பின், சம்பந்தப்பட்ட பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள, கட்டடத்தின் மதிப்பு தொடர்பாக, கள ஆய்வு நடத்த சில நாட்களாகும்.இதற்கான பத்திரங்களை தவிர்த்து, மற்ற அனைத்து பத்திரங்களையும், அதே நாளில் திருப்பித் தர வேண்டும். 'பதிவு முடிந்த பத்திரங்களை உரிய காரணம் இல்லாமல், நிலுவையில் வைத்திருக்கக் கூடாது' என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், பெரும்பாலான சார் - பதிவாளர்கள், பத்திரங்களை உடனடியாக வழங்காமல் மக்களை அலைக்கழிக்கின்றனர். சமீபத்தில் சென்னையில் நடந்த கூட்டத்தில், 'பத்திரங்களை திருப்பித் தராமல் அலைக்கழிக்கும் சார் - பதிவாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக திடீர் ஆய்வுகள் நடத்த, மாவட்ட பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னையில் பதிவுத்துறை தலைவர் மற்றும் பதிவுத்துறை செயலர் தலைமையில், உயர் அதிகாரிகள், பல்வேறு சார் - பதிவாளர் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பதிவு முடிந்தும், நிலுவையில் இருந்த பத்திரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து மதுரை உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களிலும், பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி.,க்கள், திடீர் ஆய்வுகளில் இறங்கி உள்ளனர். இதில் காரணமின்றி பத்திரங்களை நிலுவையில் வைத்திருக்கும், சார் - பதிவாளர்கள் மீது இடமாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பதிவுத்துறை உயர் அதிகாரிகளின், அதிரடி நடவடிக்கை, சார் - பதிவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை