போலி அடையாள அட்டை தயாரித்து ஆள்மாறாட்டம் பதிவாளர் பொறுப்பல்ல என பதிவுத்துறை விளக்கம்
சென்னை: 'பத்திரப்பதிவில் போலி அடையாள அட்டை போன்ற ஆவணங்களை தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்யும் விவகாரங்களில், சார் - பதிவாளர் பொறுப்பாக மாட்டார்' என, பதிவுத்துறை தெரிவித்துள்ளது. சொத்து வாங்குவது தொடர்பான பத்திரங்கள், சார் - பதிவாளர் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. இதில், ஒருவருக்கு சொந்தமான சொத்து, வேறு நபர்களால் போலி ஆவணங்களை பயன்படுத்தி அபகரிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. சொத்து அபகரிப்பு இது போன்ற புகார்கள் எழும் போது, அசல் உரிமையாளர் அளிக்கும் புகார் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிப்பர். இது போன்ற சம்பவங்களில், போலி ஆவணங்களை ஏற்று பத்திரங்களை பதிவு செய்து கொடுக்கும் சார் - பதிவாளர்கள் மீது, மக்களுக்கு கோபம் எழுகிறது. இதனால், சார் - பதிவாளரையும் சேர்த்து புகார் அளிக்கின்றனர். அதன் அடிப்படையில், சார் - பதிவாளரை முதல் குற்றவாளியாக சேர்த்து, காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கின்றனர். இதனால், சொத்து அபகரிப்பு தொடர்பான அனைத்து வழக்குகளிலும், சார் - பதிவாளர்கள் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட சொத்து அபகரிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அங்குள்ள மாவட்டப் பதிவாளருக்கு கடிதம் எழுதினர். அதற்கு பாளையங்கோட்டை நிர்வாக மாவட்ட பதிவாளர் அளித்துள்ள பதில்: இந்த குறிப்பிட்ட வழக்கில் தொடர்புடைய பத்திரம், அடையாள அட்டை, வில்லங்க சான்று, அசல் முன் ஆவணங்கள் ஆகியவற்றை பரிசீலித்து தான் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறான ஆவணங்கள் இதில், பதிவுக்கு வரும் நபர், தவறான ஆவணங்களை தாக்கல் செய்கிறார் என, எந்த புகாரும் வரவில்லை. அதே நேரம், ஆவணதாரர்கள் போலியாக அடையாள அட்டை தயாரித்து தாக்கல் செய்து, பத்திரப்பதிவு நடந்து இருந்தால், அதற்கு சார் - பதிவாளர் பொறுப்பாக மாட்டார். பதிவின் போது புகார் எதுவும் வராத நிலையில், இது விஷயத்தில் சார் - பதிவாளரால் ஒரு கட்டத்துக்கு மேல் ஆய்வு செய்ய இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கருத்து என்ன?
பத்திரப்பதிவின் போது தாக்கல் செய்யப்படும் ஆதார் அட்டையில் உள்ள விபரங்களை, 'ஆன்லைன்' முறையில் சரிபார்க்க, சார் - பதிவாளர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அடையாள அட்டை போலியாக தயாரிக்கப்பட்டதற்கு, சார் - பதிவாளர் பொறுப்பாக மாட்டார் என, மாவட்ட பதிவாளர்கள் பதில் கொடுத்திருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அடையாள அட்டை போலியா, இல்லையா என்பதை சார் - பதிவாளர்கள் உறுதி செய்வதற்கு வழி செய்ய வேண்டும். அதைவிடுத்து, தவறுக்கு துணை போகும் சார் - பதிவாளருக்கு, பதிவுத்துறை துணைபோவது நல்லதல்ல என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.