கல்வித்திட்ட நிதியை வழங்காதது தமிழக கல்வி நலனுக்கு எதிரானது ஆசிரியர் கூட்டணி கண்டனம்
சிவகங்கை:'தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நிதி அளிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவிக்கிறது,'' என, அதன் மாநில பொதுச்செயலாளர் மயில் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாடு முழுதும் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித்திட்டம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டுதோறும் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற விகிதாச்சாரத்தில் நிதி அளிக்கப்பட்டு கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிதி மூலம் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் நலன் சார்ந்த பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன. இச்சூழலில் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமான பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் கையெழுத்திடாத காரணத்தால் 2024--2025 கல்வியாண்டில் தமிழகத்திற்கு மத்திய அரசின் பங்கீடாக அளிக்கப்பட வேண்டிய நிதி ரூ.2,152 கோடி இன்று வரை அளிக்கப்படவில்லை.2023-- 2024 கல்வியாண்டிலும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் மத்திய அரசு தமிழக அரசிற்கு வழங்க வேண்டிய 4ம் தவணை நிதி ரூ.249 கோடியையும் இதுவரை வழங்கவில்லை. இச்செயல் தமிழக கல்வி நலனுக்கு எதிரானதாகும். இதை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டிக்கிறது.மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறப்புக் குழந்தைகள், சிறப்பாசிரியர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சூழலில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியை வழங்க முடியாது என்று மத்திய அரசின் கல்வியமைச்சர் கூறுவது தமிழக ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.கல்வி என்பது மத்திய, மாநில அரசுகளின் ஒத்திசைவுப்பட்டியலில் உள்ள நிலையில் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்கும் உரிமையும், மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக்கும் உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது. தமிழக கல்வி நலன் கருதி மத்திய அரசு உடனடியாக ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.