முதல்வர் பயணம் செய்த ரயில் பாதி வழியில் நிறுத்தம்
அச்சிறுப்பாக்கம்:முதல்வர் ஸ்டாலின் வந்த, சோழன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், பாதியில் நிறுத்தப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்ற, முதல்வர் ஸ்டாலின், நேற்று சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னை திரும்பினார். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ரயில் தண்டவாளத்தை ஒட்டி, ஏரியில் உள்ள வயல் பகுதியில், சிலர் புதர்களை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். ஏரி பகுதியில் பற்றி எரிந்த தீயால், அப்பகுதி புகைமண்டலமாக காட்சி அளித்தது. இதைப்பார்த்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர், ரயிலை தொழுப்பேடு ரயில் நிலையத்தில் நிறுத்தினார். மாலை 4:45 மணியளவில், ரயில் நிறுத்தப்பட்டது. அச்சிறுபாக்கம் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று, தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின் ரயில் மாலை 5:50 மணிக்கு புறப்பட்டு சென்றது. முதல்வர் வந்த ரயில், பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.