உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்சூரன்ஸ் முடிந்த 12,000 அரசு வாகனங்கள் பயன்பாட்டு காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

இன்சூரன்ஸ் முடிந்த 12,000 அரசு வாகனங்கள் பயன்பாட்டு காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

சென்னை : அரசு அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களில் காலாவதியான, இன்சூரன்ஸ் இல்லாத கார், ஜீப், பஸ்கள் உள்ளிட்ட, 12,000 வாகனங்களின் பயன்பாட்டு காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது. மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகத்தின் மோட்டார் வாகன விதிகளின்படி, 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசு வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. இந்த விதியின் படி, 2023 முதல் காலாவதியான பஸ்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் விதிப்படி, தமிழகத்தில், 2024 செப்டம்பர் மாத நிலவரப்படி, 6,247 வாகனங்கள் காலாவதியாகின. இதில், அரசு அதிகாரிகள் பயன்பாட்டில் உள்ள, 700க்கும் மேற்பட்ட கார்களும் அடக்கம். காலாவதியான வாகனங்களின் பயன்பாடு, இன்று வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, 6,247 வாகனங்கள் இன்றுடன் காலாவதியாகின்றன. இவற்றுடன் சேர்த்து, 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள கார்கள், ஜீப்கள், அரசு போக்குவரத்து கழக பஸ்கள் என, 12,000 வாகனங்கள் இன்றுடன் காலாவதியாகின்றன. இவற்றின் பயன்பாட்டு காலத்தை, வரும் 2026 செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து வழங்க வேண்டும் என, மாநில சாலை போக்குவரத்து ஆணையரகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்று, 12,000 அரசு கார், ஜீப், பஸ்கள் உள்ளிட்டவற்றின் காலாவதி தேதியை நீட்டித்து, உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். இவற்றில் பல வாகனங்களுக்கு, இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. காயலான் கடைக்கு செல்லும் வகையில், பல கார்கள், ஜீப்கள், பஸ்கள் இயங்கி கொண்டு இருக்கின்றன. விபத்து ஏற்படும்பட்சத்தில், இவற்றில் பயணிக்கும் அதிகாரிகள், அலுவலர்கள், ஓட்டுநர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்கு பதிலாக, புதிய வாகனங்களை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமை சங்கம் வலியுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை