தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்; ஆண்களை விட பெண்கள் அதிகம்
சென்னை: தமிழகம் முழுதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி முடிந்து, நேற்று இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில், 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, கடந்த அக்டோபர், 29ல் துவங்கியது. அன்று முதல் நவம்பர், 28 வரை, வாக்காளர்களிடம் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெயர் சேர்க்க, 14.02 லட்சம் விண்ணப்பம் பெறப் பட்டு, 13.80 லட்சம் பேர் பெயர்கள் சேர்க்கப்பட்டன. பெயர் நீக்க, 5.17 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 4.98 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டன.இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாநிலத்தில், 6 கோடி, 36 லட்சத்து, 12,950 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 3 கோடி 11 லட்சத்து 74,027 பேர் ஆண்கள்; 3 கோடி 24 லட்சத்து 29,803 பேர் பெண்கள்; 9,120 பேர் மூன்றாம் பாலினத்தவர். அதிக வாக்காளர்கள்
அதிக வாக்காளர்கள் உள்ள சட்டசபை தொகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லுார் உள்ளது. இதில், 3.45 லட்சம் ஆண்கள்; 3.46 லட்சம் பெண்கள்; 129 மூன்றாம் பாலினத்தவர் என, 6.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதி உள்ளது. இங்கு, 4 லட்சத்து 91,113 வாக்காளர்கள் உள்ளனர்.குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியாக, நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி உள்ளது. இங்கு, 86,456 ஆண்கள்; 90,045 பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர் நான்கு பேர் என, மொத்தம் ஒரு லட்சத்து 76,505 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில், சென்னை துறைமுகம் தொகுதி உள்ளது. இதில், ஒரு லட்சத்து 78,980 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில், 4.78 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்; 3,740 வெளிநாடு வாழ் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். விண்ணப்பிக்கலாம்
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை, தற்போது செயல்பாட்டில் உள்ளது. வாக்காளர் பட்டியலை, https://elections.tn.gov.inஎன்ற இணையதளத்தில் காணலாம். வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் அல்லது www.voters.eci.gov.inஎன்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும், 'Voter Help Line' என்ற மொபைல் போன் செயலி வழியாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதலாக சேர்ப்பு
கடந்த அக்., 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, 6.27 கோடி வாக்காளர்கள் இருந்தனர். நேற்று வெளியிடப்பட்ட இறுதி பட்டியலின்படி, 6 கோடி 36 லட்சத்து 12,950 வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக, 8 லட்சத்து 82,362 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.