தர்ப்பூசணியில் ரசாயனம் இல்லை; நம்பி சாப்பிடலாம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தகவல்
சென்னை,:''சென்னையில் ரசாயனம் கலந்த தர்ப்பூசணி பழங்கள் எங்கேயும் இல்லை. பொதுமக்கள் அச்சப்படாமல் தர்ப்பூசணியை வாங்கிச் சாப்பிடலாம்,'' என, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.தர்ப்பூசணி பழம் குறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வெளியிட்ட வீடியோவால், தர்ப்பூசணி விற்பனை பாதிக்கப்பட்டதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டினார். ஒரு டன், 14,000 ரூபாய்க்கு விற்ற தர்ப்பூசணி பழங்கள், 3,000 ரூபாயாக குறைந்து விட்டதாக, விவசாய நல சங்க தலைவர் வெங்கடேசனும் புகார் தெரிவித்திருந்தார். மேலும், உணவு பாதுகாப்பு துறைக்கு எதிராக, பல்வேறு இடங்களில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, தர்ப்பூசணி வீடியோ வெளியிட்டவரும், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரியுமான சதீஷ்குமார் நேற்று அளித்த பேட்டி:சென்னையில் இதுவரை பல்வேறு பழக்கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், ரசாயனம் கலந்த, கலப்படமிக்க தர்ப்பூசணி பழங்கள் கண்டறியப்படவில்லை. சோதனையின் போது கெட்டுப்போன, எலி கடித்த, அழுகி போன பழங்கள் தான் ஏராளமாக கிடைத்தன. அவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.கலப்படமிக்க தர்ப்பூசணிகள் சென்னையில் எங்கேயும் கண்டறியப்படவில்லை. பொது மக்கள் பயப்பட தேவையில்லை. தாராளமாக தர்ப்பூசணி பழங்களை நம்பி வாங்கி சாப்பிடலாம். இயற்கையாக தர்ப்பூசணிக்கென ஒரு கலர் இருக்கிறது. இளம்சிவப்பை விட்டு, மிகவும் சிவந்த கலரில் தர்ப்பூசணி இருந்தாலோ, சாப்பிடும் போது அதிக சர்க்கரை போல இனித்தாலோ, அவற்றில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கும். இதைத்தான் மக்களுக்கு சொல்லித்தர விரும்புகிறோம். ஆனால், எல்லா பழங்களிலும் ரசாயனம் கலந்ததாக சொல்லி விட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
திடீர் உடல்நல குறைவு
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் ஹோட்டலில், சமீபத்தில், 'பீப் ஷவர்மா, மயோனைஸ்' சாப்பிட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சாப்பிட்டதாக கூறப்படும் ஹோட்டலுக்கு, நேற்று முன்தினம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்ற போது, அந்த ஹோட்டல் பூட்டப்பட்டிருந்தது. அதேபோல, அண்ணா சாலை பிலால் ஹோட்டல் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. அதனால், உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில், நேற்று அதிகாரிகள் அங்கு ஆய்வுக்கு சென்றனர். ஹோட்டலுக்கு அருகே சென்ற நிலையில், திடீரென ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் திரும்பினர். அத்துடன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மொபைல் போன்களும் உடனடியாக, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டன.இதுகுறித்து, மற்ற அதிகாரிகளிடம் விசாரித்த போது, நியமன அலுவலர் சதீஷ்குமாருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினர். அதேநேரம், அரசியல் ரீதியான அழுத்தம் காரணமாகவே, ஹோட்டலில் அதிகாரிகள் சோதனை செய்யாமல் திரும்பியதாக கூறப்படுகிறது.