உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வில் இணைய எந்த நிபந்தனையும் இல்லை ஓ. பன்னீர் செல்வம் பேட்டி

அ.தி.மு.க.,வில் இணைய எந்த நிபந்தனையும் இல்லை ஓ. பன்னீர் செல்வம் பேட்டி

பெரியகுளம்:''அ.தி.மு.க.,வில் இணைய, எனக்கு எந்த நிபந்தனையும் இல்லை,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.தேனி மாவட்டம், பெரியகுளம் கைலாசபட்டி பண்ணை வீட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு நிதி கொடுத்து விதை போட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர்., காலத்திலேயே மாவட்ட செயலராக இருந்தவர் செங்கோட்டையன். தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க., ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா அனைவரையும் அழைத்து பேசினார். எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனால், அதை ஏற்க பழனிசாமி மறுத்து விட்டார். 50 ஆண்டு காலமாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உழைத்து அ.தி.மு.க.,வை உருவாக்கினர். ஒன்றரை கோடி தொண்டர்கள் பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கட்சியில் விதி உள்ளது. விதியை மாற்றி ஒற்றை தலைமையாக்கினார் பழனிசாமி. தன்னையே பொதுச்செயலராக நியமித்துக் கொண்டார். விளைவு -- தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்து வருகிறார். நான், சசிகலா, தினகரன் என அனைவரும் ஒன்றிணைந்தால், அ.தி.மு.க., வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறலாம். அ.தி.மு.க.,வில் இணைந்து செயல்பட, எனக்கு எந்த நிபந்தனையும் இல்லை. ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது மாதிரி தான் என 'இண்டி' கூட்டணி குறித்து, அப்போதே தெரிவித்தேன். அது இப்போது, நிரூபணமாகி விட்டது. நடிகர் விஜய், இது வரை தேர்தலை சந்தித்து, தன்னுடைய பலத்தை நிரூபிக்கவில்லை. அரசியலில் எந்த இலக்கை நோக்கி செல்கிறார் என்பது தெரியவில்லை. அவருடைய நிலை என்னாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். --பஞ்சமி நிலம் வாங்கவில்லைபஞ்சமி நிலமாக சொல்லப்பட்டு, தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டிருக்கும் இடத்தை, 2022 டிசம்பரில் வாங்கினேன். பின், அதை 2024ல் சுப்புராஜ் என்பவருக்கு விற்று விட்டேன். ஆனாலும், அந்த இடம் பஞ்சமி நில வகைப்பாட்டின் கீழ் வரவில்லை. பல்வேறு சமுதாயத்தினர், அடுத்தடுத்து விற்பனை செய்த இடம் தான் அது. செய்திகள் பரவி இருப்பது போல, ஆணையத்தில் இருந்து, எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !