ஆக்கிரமிப்பில் இருந்து 38,856 ஏக்கர் மீட்பு வேலி போட்டு பாதுகாக்க பணம் இல்லை
சென்னை:தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 38,856 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டாலும், 1,803 ஏக்கருக்கு மட்டுமே வேலி அமைக்க முடிந்ததாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நீர்நிலை, மேய்க்கால் உள்ளிட்ட பல்வேறு வகை நிலங்கள், அரசுக்கு சொந்தமாக உள்ளன. இவற்றில் பெரும்பாலான பகுதிகள், புறம்போக்கு நிலங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அரசின் துறைகளுக்கு தேவைப்படாத நிலங்கள் மட்டும், பொது மக்களுக்கு பட்டா வழங்க வழி வகை உள்ளது. நீர்நிலைகள் உள்ளிட்ட சில வகை நிலங்களை, எக்காரணம் கொண்டும் வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது என தடை உள்ளது. நீர்நிலை புறம்போக்கு நிலங்களை மீட்க, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையில் வருவாய் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்காக, அந்தந்த துறைகள் நிலையில் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமை செயலர் நிலையில், சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வழக்குகள், அரசியல் ரீதியான அழுத்தம், உள்ளூர் மக்கள் போராட்டம் போன்ற பல்வேறு பிரச்னைகளை கடந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், மீட்கப்பட்ட நிலங்களை பாதுகாப்பது இன்னொரு சவாலாக அமைந்துள்ளது. இது குறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. கடந்த 2021 முதல் 2025 பிப்ரவரி வரை, 38,856 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட நிலங்களில் புதிதாக ஆக்கிரமிப்பு வராமல் இருக்க, எச்சரிக்கை பலகை மட்டுமே வைக்க முடிகிறது. வேலி அமைத்து, வெளியார் நுழைவதை தடுக்க, சிறப்பு கண்காணிப்பு குழு உத்தரவிட்டும், தற்போது வரை 1,803 ஏக்கர் நிலங்களுக்கு மட்டுமே வேலி அமைக்கப்பட்டுள்ளது.நிதி இல்லாததால், மற்ற நிலங்களுக்கு வேலி அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மீட்ட நிலங்களை பாதுகாக்கும் பணிகளுக்கு, ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் நிதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அது கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், நிலங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அதிகாரி கூறினார்.