உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருகனை நினைக்காத நாளில்லையே... இன்று கந்தசஷ்டி ஆரம்பம்

முருகனை நினைக்காத நாளில்லையே... இன்று கந்தசஷ்டி ஆரம்பம்

குழந்தை வரம் தாசூரபத்மனால் துன்பப்பட்ட தேவர்கள், ''உங்களைப் போன்ற பலமுள்ள ஒரு இளைஞனை எங்களுக்கு தர வேண்டும்'' என சிவபெருமானிடம் வேண்டினர். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாம தேவம், சத்யோஜாதம் என சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. ஆனால் ஞானிகள் மட்டுமே வழிபடும் முகம் ஒன்று(அதோமுகம்) அவரது இதயத்தில் உள்ளது. கீழ் நோக்கிய அந்த அதோமுகத்தை வெளிப்படுத்தி ஆறுமுகமாக அவதரிக்கச் செய்தார். இதற்காக அவர் தன் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறிகள் வரவழைத்தார். அக்னிபகவான் அவற்றை வாயுவிடம் அளித்தார். வாயு அதைத் தாங்க முடியாமல் சரவணப் பொய்கையில் சேர்த்திட தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறின. பார்வதி அவர்களை ஒன்றிணைக்க 'ஆறுமுகன்' எனப் பெயர் பெற்றார். ''கருணை கூர் முகங்கள் ஆறும்கரங்கள் பனிரெண்டும் கொண்டேஒரு திருமுருகன் வந்தாங்குஉதித்தனன் உலகம் உய்ய''சிவன் வேறு, முருகன் வேறு அல்ல. இருவரும் ஒருவரே! சூரபத்மனை வதம் செய்த முருகன் அவனை சேவல், மயிலாக மாற்றினார். அவனது ஆணவத்தை அழித்ததும் சேவலை கொடியாகவும், மயில் வாகனமாகவும் ஏற்றுக் கொண்டார். இதை நினைவூட்டும் வகையில் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி ஐப்பசி வளர்பிறையில் முதல் ஆறு நாள் நடக்கிறது. இது திருச்செந்துாரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்று பழமொழி உண்டு. அதற்கு சஷ்டியில் விரதம் இருந்தால் அகமாகிய(உள்ளே) கருப்பையில் கரு தோன்றும் என்பது பொருள். எனவே சஷ்டி விரதம் இருந்தால் முருகனருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சஷ்டி என்பது ஆறாவது நாள். ஆறாம் எண்ணின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் அதி தேவதை மகாலட்சுமி. எனவே சஷ்டி விரதம் மூலம் பதினாறு வகையான பேறுகளை பெறலாம். பிரதமை முதல் சஷ்டி திதி வரை ஆறு நாளும் அதிகாலை எழுந்து கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் பாடுவது அவசியம். நாள் முழுவதும் விரதம் இருந்து இரவு பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும். சூரசம்ஹாரத்தை தரிசித்து ஏழாம் நாள் காலையில் பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.''இசை பயில் சடாச்சரம் அதனாலே இகபர சௌபாக்யம் அருள்வாயே''என்னும் திருப்புகழ் கூறுவது போல சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு எல்லா நன்மையும், நீண்ட ஆயுளும் கிடைக்கும். சஷ்டி நாயகன் முருகன் அருளால் எல்லா வரமும் பெறுவோம்.

மாமரமாக மாறியவன்

பார்வதிதேவி தாட்சாயினியாக அவதரித்த போது அவளுக்கு தந்தை ஆகும் பாக்கியம் பெற்றவன் தட்சன். ஆணவம் மிக்க அவன், மருமகன் சிவனையே அவமதித்தான். கடவுளை அவமதிப்பவர்களே மறுபிறவியில் அசுரர்களாக பிறப்பர். அவர்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு. தட்சன் மறுபிறப்பில் பத்மாசுரன் என்னும் அசுரனாக பிறந்தான். அவனது சகோதரர்கள் கஜமுகாசுரன், சிங்கமுகன், பானுகோபன். இவர்கள் தேவர்களை துன்புறுத்தினர். இந்நிலையில் சிவன் தன் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறிகள் வரவழைத்தார். அக்னிபகவான் அவற்றை வாயுவிடம் அளித்தார். வாயு அதைத் தாங்க முடியாமல் சரவணப் பொய்கையில் சேர்த்திட தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறின. பார்வதி அவர்களை ஒன்றிணைக்க 'ஆறுமுகன்' எனப் பெயர் பெற்றார். நவவீரர்கள் என்னும் ஒன்பது வீரர்களுடன் இணைந்து போருக்கு தயாரானார் முருகப்பெருமான். முதலில் பத்மாசுரனின் மூன்று தம்பிகளை அழித்தார். மாயாஜாலத்தில் வல்லவனான பத்மாசுரன் மாமரமாக மாறினான். அவனை அழிக்க மரத்தை இரண்டாக பிளந்தார். ஒரு பாதியை சேவலாக்கி கொடியாகவும், மறு பாதியை மயிலாக்கி வாகனமாகவும் மாற்றினார்.இதை நினைவூட்டும் வகையில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் சேவலை பறக்க விடுவதோடு, சூரனின் தலைப்பகுதியில் மாவிலையைக் கட்டுகின்றனர். மாமரமாக இருந்த சூரனுக்காக மாவிலை கட்டப்படுகிறது.

மஹாபெரியவரின் வாக்கு

விரதம் ஏன் இருக்க வேண்டும்? அதனால் உடலில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பது குறித்து காஞ்சி மஹாபெரியவர் சொல்வதை கேளுங்கள். உடல்நலம் கருதியே நம் முன்னோர்கள் விரதங்களை ஏற்படுத்தினர். எப்போதும் எதையாவது சாப்பிட்டபடி இருந்தால், ஜீரண உறுப்புக்குத் தொடர்ந்து வேலை இருக்கும். அதற்கு ஓய்வு தர வேண்டாமா... அதற்காகத் தான் விரதம் இருக்கிறோம். விரதத்தை 'உபவாசம்' என்பர். 'உப' என்றால் அருகில். 'வாசம்' என்றால் வசிப்பது. அதாவது 'அருகில் வசிப்பது' என பொருள். யாருக்கு அருகில் வசிப்பது? கடவுளுக்கு அருகில். அதாவது கடவுளை பற்றி எப்போதும் சிந்திப்பது. சாப்பிடாமல் இருப்பதால் உடம்பில் உள்ள கொழுப்பு கரையும். வயிறு சுருங்கும். பிறகு எப்போதும் மனம் பக்தியில் ஈடுபடும். இதனால் முற்பிறவியில் செய்த தீவினை கழியும் என்கிறார்.

பாடுவோர் பாடினால் பாவம் போகும்

பாவம், புண்ணியத்திற்கு தகுந்தபடி நம் வாழ்வு அமைகிறது. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, ஜென்மகுரு காலத்தில் ஏற்படும் துன்பத்திற்கு ஏற்ப பரிகாரத்தை நாம் செய்திருப்போம். ஆனால் எத்தனை பரிகாரம் செய்தாலும், 'கந்தரலங்காரம்' பாடலில் உள்ள இந்த பாடலுக்கு ஈடு இணை வேறில்லை.நாள் என்செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த கோள்என் செயும்கொடுங்கூற்றென் செயும், குமரேசர் இரு தாளும் (இரண்டு பாதம்),சிலம்பும் (இரண்டு சிலம்பணி),சதங்கையும் (இரண்டு சலங்கை),தண்டையும் (இரண்டு தண்டை),சண்முகமும் (ஆறு முகம்)தோளும் (12 தோள்கள்)கடம்பும் (1கடப்ப மாலை)எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.இதில் இடம் பெற்றுள்ள 27 உறுப்புகளும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. பக்தி உணர்வோடு பாடினால் பாவம் போகும்.

கந்தகுரு கவசம் காட்டும் தலங்கள்

சாந்தானந்தர் பாடிய கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் உள்ளன.1. சுவாமிமலை2. திருச்செந்துார்3. திருமுருகன்பூண்டி4. திருமலைக்கோவில் (செங்கோட்டை)5. திருவண்ணாமலை (கம்பத்திளையனார்)6. திருப்பரங்குன்றம்7. திருத்தணி8. எட்டுக்குடி (நாகை மாவட்டம்) 9. போரூர்10. திருச்செங்கோடு11. சிக்கல்12. குன்றக்குடி (சிவகங்கை)13. குமரகிரி (சேலம் அம்மாப்பேட்டை) 14. பச்சைமலை (கோபி செட்டிபாளையம் அருகில்) 15. பவளமலை (கோபி செட்டிபாளையம் அருகில்) 16. விராலிமலை17. வயலுார்18. வெண்ணெய்மலை (கரூர் அருகில்) 19. கதிர்காமம் (இலங்கை)20. காந்தமலை (மோகனுார், நாமக்கல் மாவட்டம்) 21. மயிலம் (விழுப்புரம்)22. கஞ்சமலை (சேலம்) 23. முத்துக்குமரன் மலை (வேலுாரில் இருந்து 13 கி.மீ., துாரத்திலுள்ள ஒக்கனாபுரம்) 24. வள்ளிமலை (வேலுார்) 25. வடபழநி26. ஏழுமலை(திருப்புகழில் அருணகிரிநாதர் பாடியுள்ளார்) 27. தத்தகிரி (சேலம் மாவட்டம் சேந்தமங்கலம் அருகிலுள்ள சாமியார்காடு கிராமம்)28. கந்தகிரி (நாமக்கல்லில் இருந்து 5 கி.மீ., துாரத்திலுள்ள ரெட்டிப்பட்டி பழநியாண்டவர் கோயில்) வெற்றி மீது வெற்றிதந்தையான சிவனின் மறுவடிவமே முருகன். பாம்பன் சுவாமிகள் 'அறுமுகச்சிவனார்' என்றே முருகனைக் குறிப்பிடுகிறார். தாயான பார்வதியும் முருகனை விட்டு அகலுவதில்லை. சூரபத்மனை வெல்ல போருக்கு புறப்பட்ட போது முருகன் தாயிடம் ஆசி பெறச் சென்றார். அப்போது பார்வதி தன் சக்தி எல்லாம் திரட்டி வேலாகத் தந்தாள். 'சக்திவேல்' இல்லாமல் முருகனைக் காண முடியாது. அந்த சக்திவேல் தான் சூரசம்ஹாரத்தை வெற்றியுடன் முடித்தார் முருகன். அவரைச் சரணடைந்தால் வெற்றி மீது வெற்றி சேரும்.பார்த்தால் போதும்உன் பன்னிரண்டு கண் வேண்டாம். ஒரு கண்ணால் என்னை பார்த்தால் போதும் என கவிஞர்கள் முருகனைப் பற்றி பாடியுள்ளனர். இந்த வரிகளுக்கு காரண கர்த்தா யார்? ஜகத்குரு ஆதிசங்கரர்! இவர் உடல்நலம் சரியில்லாத போது முருகன் மீது சுப்பிரமணிய புஜங்கம் பாடினார். அதில் ஒரு ஸ்லோகத்தில், “இரக்கமுள்ள ஆறுமுகனே! உன் தாமரை முகங்கள் ஆறிலும் கருணை புரியும் பன்னிரண்டு கண்கள் உள்ளன. என் குறையை போக்க ஒரு கண்ணால் என்னை பார்த்தால் போதும். அப்படி பார்ப்பதால் உனக்கு என்ன குறை வரப் போகிறது?” என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

suresh Sridharan
அக் 22, 2025 13:30

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நிகழ்வதும் நினைப்பதும் முருகா


பாரத புதல்வன்
அக் 22, 2025 11:07

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... மழை பெய்து, விவசாயம் செழித்து மக்கள் ஆரோக்கியத்துடன் மாய திராவிடத்தில் சிக்கி சீரழியாமல் வாழ அருள் புரிய வேண்டும் முருகா...


lana
அக் 22, 2025 10:48

வெற்றிவேல் வீரவேல். முருகனுக்கு அரோகரா


Kasimani Baskaran
அக் 22, 2025 03:53

பக்தி வளரவேண்டும். கெட்ட சக்திகளை வேரறுக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை