உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு... கிடையாது!

இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு... கிடையாது!

சென்னை :தமிழக அரசு தயாரித்துள்ள மாநில கல்வி கொள்கையை, சென்னையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். 'இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு கிடையாது; ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' நடைமுறை பின்பற்றப்படும்' என்பது உள்ளிட்ட அம்சங்கள், அதில் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசு, 2020ல், புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. 'ஒருங்கிணைந்த பட்டியலில் கல்வி உள்ளதால், அனைத்து மாநிலங்களும், அதிலுள்ள அம்சங்களை பின்பற்ற வேண்டும். அப்போது தான், மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைப்பிலான கல்வித் திட்டங்களுக்கு நிதி பெற முடியும்' என்றும் கூறியது. ஆனால், தமிழக அரசு, தேசிய கல்விக் கொள்கையின் சில அம்சங்களை எதிர்த்தது. அதனால், கல்விக்கான மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில மக்களின் தேவைகள், உணர்வுகளுக்கு ஏற்ப, தமிழக மாணவர்களுக்கு உகந்த தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்க, தமிழக அரசு முடிவு செய்தது. ஓய்வு பெற்ற நீதிபதி டி.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதற்கான கொள்கை வரைவு உருவாக்கப்பட்டது. அது, கடந்தாண்டே முதல்வரிடம் வழங்கப்பட்டது. சென்னை கோட்டூர்புரம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று நடந்த விழாவில், மாநில கல்விக் கொள்கையை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: * மாநில மொழியான தமிழ், தேவையின் அடிப்படையில் ஆங்கிலம் என்ற அடிப்படையில், இரு மொழிக்கொள்கை அரசின் மொழிக் கொள்கையாக இருக்கும். மற்ற மாநில மக்களின் தாய் மொழியை கற்க தேவையான வாய்ப்புகள், வசதிகள் செய்து தரப்படும் * எட்டாம் வகுப்பு வரை எந்த வகுப்பிலும் எந்த மாணவரையும் நிறுத்தி வைக்காமல், அடுத்தடுத்த நிலைக்கு, குழந்தைப் பருவ மாணவர்கள் முன்னேறி படிக்க, தேவையான சூழலை உருவாக்கவும், அதற்கேற்ப கற்றல், கற்பித்தல் அணுகுமுறை அமையவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் * பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு இனி கிடையாது; பிளஸ் 2க்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் * ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல், பயிற்சி, குழந்தைநேயக் கற்றல் சூழல், மாணவர்களுக்கு விளையாட்டு, கலை, அறிவியல் அனைத்தும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியை தருவதாக பள்ளிக்கல்வி செயல்பாடுகள் அமைந்திருக்கும் * பசுமை பரப்புடன் பள்ளிகள், உயர் தொழில்நுட்ப அணுகலுடன், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், பாலினம், பொருளாதாரம், மாற்றுத்திறனாளிகள் என்ற பாகுபாடற்ற சமத்துவக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் * மாறி வரும் கல்வி சூழலுக்கு ஏற்ப, செய்கை நுண்ணறிவு திறன் எனப்படும் ஏ.ஐ., ரோபோட்டிக்ஸ், கலை, உடற்கல்வி படிப்புகள், பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் * மாவட்டம்தோறும் உண்டு உறைவிட பள்ளிகளாக உள்ள மாதிரிப் பள்ளிகளை விரிவாக்க, மாவட்ட வளக் குழுக்களின் வாயிலாக ஆய்வு செய்யப்படும். வட்டாரத்தில் சிறப்பாக செயல்படும் அரசு பள்ளியை தேர்வு செய்து, மாதிரி பள்ளிகளை போல், அனைத்து வசதிகளையும் வழங்கி, முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் இலக்கை நோக்கிய கற்பித்தலுக்கு வழி செய்யப்படும். இந்த பள்ளிகளுக்கு, 'வெற்றி பள்ளி' என்று பெயர் சூட்டப்படும் * கிராமப்புறங்களில், தொலைதுார பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அறிவியல், கணித கல்வியை மேம்படுத்த, 100 ஆய்வகங்கள் நிறுவப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'படிப்பாற்றலை விட படைப்பாற்றலே முக்கியம்'

இந்நிகழ்ச்சியில், முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்கு தேர்வான அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பள்ளிக் கல்வியை முடிக்கும் அனைவரும் உயர் கல்வி கற்க வேண்டும் என்பது தான் நம் இலக்கு. தற்போது, அரசு பள்ளிகளில் படித்தவர்களில், 75 சதவீதம் பேர், உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர் என்பது மகிழ்ச்சி. மாணவர்கள், தங்களின் நண்பர்களையும் உயர் கல்வி கற்க வழிகாட்ட வேண்டும். மாணவர்கள் படித்து, சாதிப்பதைக் கண்டு, ஒரு தாயைப் போல இந்த அரசும் மகிழ்கிறது. கடந்த மூன்றாண்டுகளில், 9,977 அரசுப் பள்ளி மாணவர்கள், முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இந்தாண்டு மட்டும், 93 முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில், 50 துறைகளில், 901 அரசுப் பள்ளி மாணவர்கள் சேருகின்றனர். அவர்களில், 150 பேர் மாற்றுத்திறனாளிகள். ஏற்கனவே, ஐ.ஐ.டி.,களுக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 22 பேர் செல்கின்றனர். முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள அரசு பள்ளி மாணவர்கள், அச்சம், தயக்கம் கொள்ள வேண்டாம். காடு பெரிதாக இருந்தாலும், அங்கு சிங்கம்தான் ராஜா என்பதுபோல, நீங்கள் அங்கு படித்து வெற்றி பெற்று, கோப்பைகளை வெல்லுங்கள். உங்களை துாக்கி வைத்துக் கொண்டாட, நாங்கள் தயாராக உள்ளோம்.

மாநில கல்விக்கொள்கை

எல்லா விஷயங்களிலும் தனித்தன்மையுள்ள மாநிலமான தமிழகம், புதிய கல்விக் கொள்கையை வகுத்து, அதிலும் தனித்தன்மையுடன் உள்ளது. இந்த கொள்கை, படித்து மனப்பாடம் செய்யாமல், சிந்தித்து தேர்வெழுத வழி வகுக்கிறது. எதிர்காலத்திற்கு படிப்பாற்றலை விட, படைப்பாற்றல் கொண்ட மாணவர்களின் தேவைதான் அதிகம் உள்ளது. அதற்கேற்ப, கல்வியுடன் உடற்பயிற்சியும் இணைக்கப்படும். தாய்மொழியான தமிழ் நம் பெருமிதமாகவும், அடையாளமாகவும் இருக்கும். அதேநேரம், ஆங்கிலமும், தமிழும் இணைந்த இரு மொழி கொள்கைதான் நம் கொள்கை; அதுவே தொடரும். 'நான் முதல்வன்' திட்டம், தேர்வுக்கு வழிகாட்டுவதாக மட்டும் அல்லாமல், வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாகவும் அமையும். அனைவருக்கும் கல்வி; அனைத்திலும் உயர்வு என்பதுதான், அதன் ஒரு வரி சுருக்கம். அனைவருக்குமான சமத்துவ கல்வி, அறிவுக் கல்வி, பிற்போக்குத்தனங்களை அனுமதிக்காத பகுத்தறிவு கல்விக்கு வழிகாட்டும். மாணவர்கள், உலகளவில் போட்டியிட்டு வெல்ல, இந்த மாநிலக் கல்விக் கொள்கை துணை நிற்கும். கல்வியில் முன்னணி மாநிலமாக உள்ள தமிழகத்தை, இது மேலும் முன்னேற்றும்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கோவி.செழியன், சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமை செயலர் முருகானந்தம், பள்ளிக் கல்வி துறை செயலர் சந்திரமோகன், பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாதிரிப் பள்ளிகள் இயக்குனர் சுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய கல்விக் கொள்கை குறித்து, அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: நாட்டில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது, மாவட்டம்தோறும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்களை சந்தித்து கருத்து கேட்டு, முன்னாள் நீதிபதி முருகேசன் உள்ளிட்ட, 14 பேர் அடங்கிய குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அரசு பள்ளி மாணவர்களும், முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் வகையில், இந்தாண்டு முதல், பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும், தமிழ் மொழிப்பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, செயற்கை நுண்ணறிவு திறன், 'ரோபோட்டிக்ஸ்' உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உடற்கல்வி தனியாக இல்லாமல், இணை கல்வியாக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் கலை திறமைகளையும் அங்கீகரிக்கிறது. ஒவ்வொரு ஒன்றியத்திலும், மாதிரி பள்ளிகளை உருவாக்க வகை செய்துள்ளது. உயர் கல்வி குறித்து, ஒன்பதாம் வகுப்பிலேயே வழிகாட்டுகிறது. 3, 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இனி இருக்காது. அதேநேரம், அவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்படும். மாறும் அறிவியல், தொழில்நுட்பம், வரலாற்று தகவல்களுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களில் புதிய மாற்றங்கள் செய்ய வழி வகுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். '

கண்ணியம் மிக்க வளர்ச்சி தடைபடும்'

முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்படுத்திய சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிராக, மாதிரிப் பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகள் குறித்த அறிவிப்புகள் கவலை தருகின்றன. இது, மாணவர்களை பாகுபடுத்துவதுடன், சமமான கற்றல் வாய்ப்பை மறுக்கிறது. சமமற்ற கல்வி முறையை நீட்டித்து, கல்வியை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கும் கொள்கையாக, தேசிய கல்விக்கொள்கை பார்க்கப்படும் நிலையில், இந்த கொள்கையும் அதையே செய்கிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை தரம் உயர்த்தவோ, நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்தி, நிலையான வளர்ச்சியை நீட்டிப்பது குறித்தோ உத்தரவாதம் இல்லை. அதேநேரம், பள்ளி செயல்பாடுகளில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்டோர் நிதியளிப்பது உள்ளிட்டவை விளக்கப்பட்டுள்ளன. இதனால், குழந்தைகளின் கண்ணியம் மிக்க வளர்ச்சி தடைபடும். மக்களின் வரிப்பணத்தில், கட்டணமில்லாத கல்விக்கு உத்தரவாதம் அளிப்பதுதான், கண்ணியமான கல்வியாக இருக்கும். மேலும், நுழைவுத்தேர்வு இல்லாத உயர் கல்வி என்ற உத்தரவாதம் இல்லாததும் குறைகளாக உள்ளன. - பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச்செயலர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ