கொள்ளையடித்த பணத்துடன் வருவர்: அன்புமணி
நன்னிலம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் நடந்த கூட்டத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பூர்வீக மாவட்டம் திருவாரூர். இந்த மாவட்டத்தில், நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில, தி.மு.க.,வை 'டிபாசிட்' இழக்க செய்ய வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயத்தை தி.மு.க., அரசு நாசப்படுத்திவிட்டது. சொந்த மாவட்டத்தையே கவனித்து பார்க்க முடியாத முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை எப்படி காப்பாற்றுவார்? திருவாரூர் மருத்துக் கல்லுாரியில் போதுமான அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள் இல்லை. விவசாயிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்றால், அவர்களை தங்கத் தட்டில் வைத்து தாங்க வேண்டும். ஆனால், விவசாயிகளின் முதுகெலும்பை உடைத்து, அவர்களை நாசப்படுத்தி உள்ளது அரசு. இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான், தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா. அவர், அமைச்சரான பின்பும், திருவாரூர் மாவட்டத்துக்கு எந்த தொழிற்சாலையும் வரவில்லை. கடந்த தேர்தலுக்கு அளித்த வாக்குறுதிகளையே இன்னும் நிறைவேற்றவில்லை. ஆனாலும், மக்களை மயக்க, இது நாள் வரை கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தை மூட்டை மூட்டையாக எடுத்து வருவர். மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாறக்கூடாது. பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவியருக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. போதை நடமாட்டம் அதிகம் உள்ளது. என்னிடம் ஆட்சி இருந்தால் கஞ்சா, போதைப் பொருட்களை ஒரே வாரத்தில் கட்டுப்படுத்துவேன். தமிழக முதல்வருக்கு நிர்வாகம் குறித்து தெரியவில்லை; தெரிந்தால், போதை நடமாட்டத்தை ஒரே நாளில் கட்டுப்படுத்தி விடுவார். இவ்வாறு பேசினார்.