உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்துார் கோவில் யானை மிதித்து பாகன், உறவினர் பலி; செல்பி எடுத்ததால் ஆக்ரோஷமானதாக தகவல்

திருச்செந்துார் கோவில் யானை மிதித்து பாகன், உறவினர் பலி; செல்பி எடுத்ததால் ஆக்ரோஷமானதாக தகவல்

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, தெய்வானை என்ற யானை உள்ளது. சுவாமி வீதி உலாவின் போது, முன்பாக சென்று வரவும், மற்ற நேரங்களில் கோவில் முன்பாக நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்கும் பணியிலும், இந்த யானை ஈடுபட்டு வந்தது.அப்போது பக்தர்கள் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை யானைக்கு வழங்குவது வழக்கம்.யானை பராமரிப்பு பணியில் பாகன்கள் செந்தில், ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். உதவி பாகனாக திருச்செந்துார் வ.உ.சி., தெருவைச் சேர்ந்த உதயகுமார், 46, இருந்து வந்தார்.

துாக்கி வீசியது

நேற்று பிற்பகலில் யானை கட்டிய மண்டபத்திற்கு உதயகுமாரும், அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம், பழுகல் பகுதியை சேர்ந்த சிசுபாலன், 45, என்பவரும் சென்றுள்ளனர்.அவர்கள் யானைக்கு பழம் வழங்க சென்றதாக கூறப்படுகிறது. மண்டபத்திற்குள் வெளி ஆளான சிசுபாலன் நுழைந்ததை கண்டதும், ஆக்ரோஷமான யானை, திடீரென அவரை தாக்கியது. உடனே, உதயகுமார் யானையை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். அவரை துதிக்கையால் துாக்கி வீசியுள்ளது.இருவரின் கூச்சல் சத்தம் கேட்டதும், அங்கிருந்த மற்ற பாகன்கள் மண்டபத்திற்குள் சென்று, யானையை சாந்தப்படுத்தினர். யானை தாக்கியதில் காயமடைந்த இருவரும், 108 ஆம்புலன்சில் திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக, திருச்செந்துார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் யானை தாக்கியதில் இருவர் இறந்ததால், உடனடியாக கோவில் நடை மூடப்பட்டது.பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு, 45 நிமிடத்திற்கு பின் நடை மீண்டும் திறக்கப்பட்டது. யானைக்கு மதம் பிடித்துள்ளதா என்பதை கண்டறியும் வகையில், வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் பல்வேறு சோதனைகளை நடத்தினர்.யானையின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதால், புத்துணர்ச்சி முகாமிற்கு கொண்டு செல்லவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து, மண்டபத்திற்குள் வைத்து யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அங்கிருந்த சில பக்தர்களிடம் விசாரித்த போது, சிசுபாலன் யானை முன் நின்று மொபைல் போனில் செல்பி எடுத்ததாகவும், அதனால் ஆக்ரோஷமடைந்த யானை அவரை தாக்கியதாகவும் கூறினர்.

பரபரப்பு

இது குறித்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இறந்த உதவி பாகன் உதயகுமார் மீது தெய்வானை யானை மிகவும் பாசமாகவே பழகி வந்துள்ளது. சிசுபாலனின் தந்தை கிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன் வரை, தெய்வானை யானைக்கு பாகனாக இருந்ததால், அவரையும் நன்றாக அறிந்து வைத்துள்ளது.மண்டபத்திற்குள் அடைத்து வைத்து, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நிலையில், யானை திடீரென ஆக்ரோஷமாகி இருவரையும் தாக்கி உள்ளது. இந்த சம்பவத்தால் நேற்று திருச்செந்துார் கோவில் வளாகம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Natchimuthu Chithiraisamy
நவ 19, 2024 13:30

கோவில் அதிகாரிகளுக்கு கவனம் தேவை. தவறான உணவை பிறர் கொடுக்கும் போது அதில் மாத்திரைகள் இருக்கலாம்


மாயவரத்தான்
நவ 19, 2024 09:18

செல்பி எடுக்க முயலும் பொழுது அவரது செல்போனில் இந்த யானையின் உருவம் தெரிந்திருக்கும் யானையின் கண்கள் கூர்மையானது அது அந்த உருவத்தை பார்த்து அது வேறு ஒரு யானை என்று எண்ணியிருக்க கூடும் அதனால் அது மிரண்டு அவர்களை தாக்கி இருக்கும். கண்ணாடியில் தன் உருவத்தையே பார்க்கும் நாய் பூனை சிங்கம் போன்ற விலங்குகள் அவற்றை எதிர்ப்பதை நாம் பல வீடியோக்களில் பார்த்திருக்கிறோம் என்பது கவனிக்கத்தக்கது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை