உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிராமங்களில் மதுவிலக்கு மகளிர் குழுக்கள் மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் அறிவிப்பு

கிராமங்களில் மதுவிலக்கு மகளிர் குழுக்கள் மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் அறிவிப்பு

சென்னை:''மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, டிஜிட்டல் கையெழுத்து இயக்கம் துவக்கப்படும்; கிராமங்களில் மதுவிலக்கு மகளிர் குழுக்கள் துவக்கப்படும்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில், வி.சி., சார்பில் நடந்த மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில், அவர் பேசியதாவது:'இந்த மாநாட்டில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்; இது அனைவருக்கும் பொதுவானது' என, கோரிக்கை வைத்தோம். அ.தி.மு.க.,விற்கு அழைப்பு விடுக்கப்பட்டது; திருமாவளவன் கூட்டணி மாறப் போகிறார் என கூறி, மாநாட்டின் உயர்ந்த நோக்கத்தை சிதைத்து விட்டனர். மது ஒழிப்பு தமிழக பிரச்னை அல்ல; தேசிய பிரச்னை. பீஹார், குஜராத், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களை தவிர, அனைத்து மாநிலங்களிலும் மதுக்கடைகள் உள்ளன. ஜாதி ஒழிப்பை மாநிலத்திற்குள் சுருக்கி பார்க்க முடியாது; அது தேசிய பிரச்னை. அப்படிதான் மது மற்றும் போதை பொருட்களை ஒழிப்பதும்.

பரிந்துரைகள்

மதுக் கடைகளை துணிந்து மூடினால், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். ஸ்ரீமன் நாராயணன் குழு பரிந்துரைகளை, மத்திய அரசு அமல்படுத்த கோருகிறோம். அனைத்து மாநிலங்களும் குறிப்பிட்ட காலத்திற்குள் மதுக்கடைகளை மூட உறுதிமொழி தர வேண்டும். முஸ்லிம்கள் 90 சதவீதம் பேர் குடிப்பதில்லை. ஹிந்து சமூகத்தில் விளிம்பு நிலை மக்கள் அதிகம் பேர் குடிக்கின்றனர். ஹிந்து சமூகத்தை பாதுகாக்கும் பொறுப்பு மோடிக்கும், அமித் ஷாவுக்கும் உள்ளது.மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து, மாநில அரசுகள் முடிவு செய்யாது. எனவே, தேசிய அளவில் மதுவிலக்கு அமல் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வர வேண்டும். தேசிய மதுவிலக்கு கொள்கையில் நல்ல நோக்கம் உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் தீய நோக்கம் உள்ளது. அதனால், தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை. இந்தியா முழுதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். பெண்கள் இந்த யுத்தத்தை துவக்க வேண்டும். வீட்டிலிருந்து துவக்க வேண்டும். மதுவால் மனிதவளம் பாழாகிறது. போதைப்பொருட்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.

சாராய கடத்தல்

சாராய கடத்தலை தடுக்க, விழுப்புரம் மாவட்டத்தில், ஒன்பது சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றை தாண்டி கள்ளக்குறிச்சிக்கு சாராயம் வந்தது. முதல்வருக்கு எங்கள் வேண்டுகோள் என்பது, எங்கள் தீர்மானங்களை ஏற்று, மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும். மத்திய அரசுக்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள், தேசிய அளவில் மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வர வேண்டும்.அடுத்ததாக இதை வலியுறுத்தி, 'டிஜிட்டல்' கையெழுத்து இயக்கம் துவக்க உள்ளோம். கிராமங்களில் மதுவிலக்கு மகளிர் குழுக்களை துவக்க உள்ளோம். அந்த குழுக்கள், கிராமத்தில் மதுக்கடைகளை மூட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த செயல் திட்டங்களை வகுக்கும். மதுவிலக்கை மகளிர் தான் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி