உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீர்ப்பு நிரந்தரமாக வேண்டும்

தீர்ப்பு நிரந்தரமாக வேண்டும்

தீர்ப்பு நிரந்தரமாக வேண்டும்- – பா. ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் கரு. மாரிமுத்து : திருப்பரங்குன்றத்தில், கார்த்திகை தீபத்தன்று, தீபதூணில் தீபம் ஏற்றலாம் என்னும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழர்களையும், முருக பக்தர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த தீர்ப்பு நிரந்தரமாக வேண்டும். இதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழக அரசு உயர் நீதிமன்ற தீர்ப்பை மதித்திருந்தால், உச்சநீதிமன்றம் செல்லத் தேவை இருந்திருக்காது. கடந்த ஆட்சியில் தி.மு.க., அரசு தீப தூண் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவித்தது. தற்போதைய த.வெ.க., அரசு தீப தூணை, நில அளவை கல் என தெரிவிக்கிறது. தமிழக அரசுகள் இந்த விவகாரத்தில் முன்னுக்கு பின், முரணாக பேசுகின்றன. தமிழர் பண்பாட்டுக்கு எதிராக, த.வெ.க., வும், தி.மு.க.,வும் செயல்படுகின்றன. ஒற்றுமைக்கு கிடைத்த தீர்ப்பு – சீனிவாசன், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ. தலைவர். மகிழ்ச்சியையும், வரவேற்பையும் அளிக்க கூடிய வகையில் இந்த தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அங்கு தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்போதைய தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் தான், அதன் கூட்டணியில் இருந்த கட்சிகள் போராட்டம் துவங்கின. அங்குள்ள ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாகத் தான் உள்ளனர். மலை மீது தீபம் ஏற்றுவதை அங்குள்ள பிற மதத்தினரும் ஏற்றுக் கொண்டு தான் இருந்தனர். மத மோதல் இல்லாத, மத நல்லிணக்கம் கொண்ட சமுதாயத்தைத் தான் பா.ஜ. விரும்புகிறது. அப்போதைய தி.மு.க., அரசு செய்த அதே தவறைத் தான் தற்போதைய த.வெ.க. அரசும் செய்துள்ளது. அதற்கு எதிராக தற்போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அரசுக்கு இது பெரும் செலவையும், தலைக்குனிவையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை உணர்ந்து இந்த அரசு மத சார்பற்ற அரசாக செயல்பட வேண்டும். ஹிந்து மக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி இந்த தீர்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !