இது தரமற்ற ஆட்சிமுறைக்கு எடுத்துக்காட்டு; தமிழக அரசு மீது சீமான் காட்டம்
சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில் எந்த எல்லைக்கும் சென்று பொதுமக்களின் நிலங்களைக் கைப்பற்றிட வேண்டும் என்கிற தமிழக அரசின் விரைவு நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை; பரந்தூரில் 2வது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கானத் திட்டத்தினை 1075 நாட்களுக்கு மேலாக ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பொதுமக்கள் எதிர்த்து வரும் நிலையில், அதனைத் துளியும் மதிக்காமல் தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்கின்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் அனுமதி உட்பட இன்னும் பல்வேறு அனுமதிகள் பெற வேண்டிய நிலையிலும் கூட பொதுமக்களின் நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையினை தற்போது தமிழக அரசு விரைவுபடுத்தியுள்ளது.கடந்த மாதம் வெளியிட்ட அரசாணையின்படி வரையறுக்கப்பட்ட நிலங்களுக்கான மதிப்பீட்டுத் தொகைகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஏகனாபுரத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்களைக் கொண்டிருக்கும் வெளியூரைச் சேர்ந்த நில உரிமையாளர்களை அணுகி அவர்களுக்கு மதிப்பீட்டுத் தொகையினை வழங்கி தமிழக அரசு நிலங்களைக் கையகப்படுத்தி உள்ளது. 5,750 ஏக்கர் திட்ட அளவில், 17.5 ஏக்கர் என்கிற சொற்ப இடங்களைப் பெற்றது மட்டுமில்லாமல், பொதுமக்கள் அனைவரும் தங்கள் நிலங்களைத் தாமாக முன்வந்து வழங்கி அதற்கானத் தொகையினை உடனடியாகப் பெற்றுக் கொள்வது போன்ற போலி பிம்பத்தினை உருவாக்கிட இது குறித்த செய்தி குறிப்புகளையும் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. தொடர்ச்சியாக 1,075 நாட்களுக்கு மேலாகப் போராடிவரும் பொதுமக்களை ஒரு முறை கூடச் சந்திக்காத தமிழக முதல்வரின் மாவட்ட நிர்வாகமும், பொதுமக்களை மடை மாற்றிட இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் தரமற்ற ஆட்சி முறையின் எடுத்துக்காட்டாகும். அரசானது மக்களுக்கான அரசு போல செயல்படாமல் பெரு நிறுவன கார்ப்பரேட் கட்டமைப்பு போல செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீரழிவுகள், பொதுமக்களுக்கு எதிரான இன்னல்கள், வளக்கொள்ளைகள் முதலியவை பெருகிவரும் நிலையில் அவற்றைக் கண்டுகொள்ள நேரமில்லாத தமிழக அரசுக்கு விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மட்டும் பல மடங்கு முனைப்பு காட்ட முடிகின்றது.இத்திட்டத்தை எவ்வாறேனும் கொண்டு வந்து விட வேண்டும் என்கின்ற குறுக்கு வழி நடவடிக்கைகளில் செயல்படுவதை தமிழக அரசு விட்டுவிட்டு போராடும் பொது மக்களைச் சந்தித்து, அவர்களின் இன்னல்களைக் கேட்டறிந்து இத்திட்டத்தினைக் கைவிட வேண்டும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடாவிட்டால் நாம் தமிழர் கட்சி விரைவில் மிகப்பெரிய மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.