சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 23) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:தாளாளரின் மகன் போக்சோவில் கைது
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே அழகாகவுண்டனுாரில், தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி தாளாளராக நடராஜ் உள்ளார். இவரின் மகன் விணுலோகேஸ்வரன், 33; இவருக்கு மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பள்ளி தாளாளரின் மகன் என்பதால், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கு ஆங்கில பாடம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி மாணவி ஒருவர், இரு நாட்களாக பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்தார். பெற்றோர் விசாரித்தபோது, விணுலோகேஸ்வரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், தகாத முறையில் பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர் புகார் படி, பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். போக்சோ வழக்குப்பதிவு செய்து, விணுலோகேஸ்வரனை நேற்று கைது செய்தனர்.வாலிபர் மீது போக்சோ
தேனி மாவட்டம் பெரியகுளம் தெய்வேந்திரபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பெற்றோர் இல்லை. சிறுமியின் உறவினர் கம்பம் அண்ணாபுரம் கே.கே.,பட்டி சுரேஷ் பாண்டி 23. இவர் சிறுமியை காதலிப்பதாக கூறி வீட்டில் வைத்து கடந்தாண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமிக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் இந்த சிறுமி திருமணம் குறித்து குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் கிடைத்தது. கம்பம் ஊர்நல அலுவலர் முருகேஸ்வரி இதுகுறித்து விசாரித்தார். பின் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். சுரேஷ்பாண்டி மீது சிறப்பு எஸ்.ஐ., மகேஸ்வரி மற்றும் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சிறுமியை கடத்தியவருக்கு காப்பு
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. விக்கிரவாண்டியில் உள்ள அக்கா வீட்டில் தங்கி கூட்டேரிப்பட்டு நர்சிங் சென்டரில் படித்து வந்தார். கடந்த ஜூலை 22ம் தேதி நர்சிங் சென்டருக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் காணவில்லை. இதுபற்றி விக்கிரவாண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து நேற்று விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் சிறுமியை போலீசார் கண்டு பிடித்தனர். போலீசார் விசாரணையில், சு.பில்ராம்பட்டை சேர்ந்த வசித்துவம், 21; என்பவர் சிறுமியை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசாார் அவரை போக்சோவில் கைது செய்தனர்.