உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்துார் கோவில் விடுதி சுற்றுலா துறையில் முன்பதிவு

திருச்செந்துார் கோவில் விடுதி சுற்றுலா துறையில் முன்பதிவு

சென்னை:'தினமலர்' செய்தியை தொடர்ந்து, திருச்செந்துார் கோவிலில் கட்டப்பட்டுள்ள, பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கான முன்பதிவு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நேற்று துவங்கியது.துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், 48.36 கோடி ரூபாய் செலவில், இரண்டு தளங்களுடன், 99,925 சதுரடி பரப்பளவில், பக்தர்கள் தங்கும் புதிய விடுதி கட்டப்பட்டு உள்ளது.

100 அறைகள்

இதில், குளிர்சாதன வசதிகளுடன் இருவர் தங்கும், 100 அறைகள்; 9 கட்டில்கள் உள்ள 16 அறைகள், ஏழு கட்டில்கள் உள்ள 12 அறைகள் மற்றும் 28 கூடுதல் படுக்கை அறைகள் உள்ளன.மேலும், ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன், 20 பக்தர்கள் தங்கும் குடில்கள், சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுனர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், மின்துாக்கி என, அனைத்து வசதிகளும் உள்ளன. முதல்வர் ஸ்டாலின், இவ்விடுதியை 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இரு வாரங்களுக்கு முன் திறந்து வைத்தார். திறப்பு விழா முடிந்த நிலையில், விடுதிகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது, பராமரிப்பது தொடர்பாக, கோவில் நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கும் இடையே பேச்சு நடந்து வந்தது. கந்தசஷ்டி விழா, நவ., 2ல் துவங்க உள்ள நிலையில், விடுதிக்கு கட்டணம் நிர்ணயிக்காதது குறித்தும், முன்பதிவு துவங்காமல் இருப்பது குறித்தும், நம் நாளிதழில், இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, விடுதிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

20 குடில்கள்

'ஹால்' மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய, 20 குடில்கள் மட்டும், கோவில் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. ஒரு குடிலுக்கு தினசரி வாடகையாக, 2,000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு, கடந்த 23ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.மற்றவை, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அறைகளுக்கான முன்பதிவு, நேற்று முதல் துவக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.திருச்செந்துாரில் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதி. கோப்பு படம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி