உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.45 கோடி கையாடலில் சிக்கிய திருமலா மேலாளர்; கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்பு

ரூ.45 கோடி கையாடலில் சிக்கிய திருமலா மேலாளர்; கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'திருமலா' பால் நிறுவனத்தில், 45 கோடி ரூபாய் கையாடல் குற்றச்சாட்டில் சிக்கிய அந்நிறுவனத்தின் கருவூல மேலாளர், குடிசை வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரின் கைகள் கட்டப்பட்டு இருந்ததால், அவர் அடித்து கொலை செய்யப்பட்டு துாக்கில் தொங்கவிடப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி, 37; திருமணமாகாதவர். சென்னை மாதவரத்தில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். மூன்று ஆண்டுகளாக, மாதவரம் பொன்னியம்மன்மேடு, திருமலை நகர் விரிவு பகுதியில் உள்ள 'திருமலா' பால் நிறுவனத்தில், கருவூல மேலாளராக பணிபுரிந்து வந்தார்.அப்போது, நிறுவனத்தில் இருந்து, 44.5 கோடி ரூபாயை கையாடல் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நிறுவனத்தாரின் விசாரணையில், பண மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். கையாடல் செய்த பணத்தை, தன் தாய் விஜயலட்சுமி, சகோதரி லட்சுமி மற்றும் நண்பர்கள் வங்கி கணக்கிற்கு செலுத்தி, அதை மீண்டும் தன் வங்கி கணக்கிற்கு திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.கையாடல் செய்த பணத்தை தவணை முறையில் திரும்பத் தருவதாக கூறிய அவர், முதல் தவணையாக ஐந்து கோடி ரூபாயை, ஜூன், 26ல், வங்கி கணக்கு மூலமாக, திருமலா பால் நிறுவனத்திற்கு செலுத்தி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, புழல் பிரிட்டானியா நகரில், நவீன் பொலினேனிக்கு சொந்தமான குடிசை வீட்டில், குறுக்கே போடப்பட்டுள்ள கட்டையில், பச்சை நிற நயிலான் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.சம்பவ இடத்தில், இறந்து கிடந்த நவீன் பொலினேனியின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. துாக்கு போடும் உயரத்திற்கு ஏற டேபிள் எதுவும் இல்லை. இதனால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, சந்தேகம் எழுகிறது. இதனால்,புழல் போலீசார், சந்தேக மரணம் என்றே வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், நவீன் பொலினேனி கையாடல் செய்த பணம் தொடர்பாக, திருமலா பால் நிறுவனம் சார்பில், கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதியாமல் விசாரணை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணம் கையாடல் செய்த விவகாரத்தில் மிரட்டப்பட்டதால், நவீன் பொலினேனி தற்கொலை செய்திருக்கலாம் அல்லது அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என, போலீசார் கூறுகின்றனர்.இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: நேற்று முன்தினம் காலை, நவீன் பொலினேனியை, திருமலா பால் நிறுவனத்தைச் சேர்ந்த நரேஷ், குகுந்த் ஆகியோர் சந்தித்துள்ளனர். 'கையாடல் பணத்தை திரும்ப செலுத்தினாலும், உன்னை சும்மா விடமாட்டோம்; சிறைக்கு அனுப்புவோம்' என, மிரட்டி உள்ளனர். அது தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடக்கிறது.நவீன் பொலினேனி இறந்து கிடந்த இடத்திற்கு தன் 'மகேந்திரா தார்' காரில் சென்றுள்ளார். கையாடல் செய்த பணத்தில், சென்னையில் நிலம் மற்றும் சொகுசு கார்களையும் வாங்கி இருப்பது தெரியவருகிறது. கையாடல் செய்த தொகை அதிகம் என்பதால், பால் நிறுவனத்தின் சட்ட மேலாளர் முகமது தமிமுல் அன்சாரி, கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜிடம் தந்த புகார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. முழுமையான விசாரணைக்கு பின்னரே தற்கொலையா, கொலையா என, தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த மோசடியை நவீன் பொலினேனி மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை. அந்நிறுவனத்தில் உள்ள மற்ற சில அதிகாரிகளும் துணை போயிருக்கலாம். இதனால், முதல்வர் ஸ்டாலின், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். - பொன்னுசாமி, தலைவர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்

50 சதவீதம் கேட்டு மிரட்டியது அம்பலம்

நவீன் பொலினேனி, தன் சகோதரி மற்றும் திருமலா பால் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள இ - மெயிலில் கூறியிருப்பதாவது:போலீசில் புகார் அளிக்க வேண்டாம்; மூன்று மாதங்களில் மொத்த தொகையும் தந்து விடுகிறேன் என கூறினேன். முதல் தவணையாக, 5 கோடி ரூபாயையும் தந்துவிட்டேன். நான் முழு தொகையும் கொடுத்தபின், ராஜினாமா செய்ய இருந்தேன். அதற்குள், திருமலா பால் நிறுவனத்தில் பணியாற்றும் சிலர் என்னை மிரட்டி, மோசடி தொகையில், 50 சதவீதம் தர வேண்டும் என்று கேட்டனர். என் சாவுக்கு அவர்கள் தான் காரணம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை

திருமலா பால் நிறுவன கருவூல மேலாளர் நவீன் பொலினேனி, பணம் கையாடல் குற்றச்சாட்டில், கொளத்துார் போலீஸ் துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புகார் அளித்து இரு வாரங்கள் ஆகியும் வழக்குப் பதியாமல், துணை கமிஷனர் நேரடியாக விசாரித்துள்ளார். அவர் விடுமுறையில் சென்றிருப்பது மேலும் சந்தேகங்களை எழுப்புகிறது. திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும்முன், மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றால், முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்பதே உண்மை. உள்துறையை கட்டுப்பாட்டில் வைக்க அவரால் இயலவில்லை. அவரின் நிர்வாக தோல்விகளுக்கு வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா? உடனே, நவீன் மரணம் குறித்த நியாயமான விசாரணை நடக்க வேண்டும். இரு வாரங்களாக வழக்கு பதிவு செய்யாமல், நவீன் குடும்பத்தினரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய துணை ஆணையர்மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - அண்ணாமலைதமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்

வழக்குப்பதியாதது ஏன்?

சென்னை மாநகர போலீசார் வெளியிட்ட அறிக்கை: பால் நிறுவன கருவூல மேலாளர், 4௫ கோடி ரூபாய் மோசடி செய்தது குறித்து, நிறுவனத்தின் சட்ட மேலாளர், ஜூன், 24ல், மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை தர, மனுதாரர் அவகாசம் கோரினார். இதுவரை சமர்ப்பிக்காததால், புகார் மனு விசாரணை நிலையிலேயே உள்ளது; வழக்கு பதியவில்லை. புகாருக்குள்ளான நவீன் பொலினேனியை போலீசார் அழைத்து விசாரிக்கவில்லை. முன் ஜாமின்கோரி, முதன்மை நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை ஜூலை, 11க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொளத்துார் துணை கமிஷனரிடம், ஜூன், 25ல், நிறுவனம் தரப்பில் தரப்பட்ட புகார், மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை துவங்கவில்லை. இந்நிலையில், நவீன் பொலினேனி, நேற்று முன்தினம் மாலை, தன் சகோதரி, திருமலா பால் நிறுவன இ - மெயிலுக்கு தகவல் அனுப்பிவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் அனுப்பிய இ - மெயிலில், காவல் துறை பற்றி எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

premprakash
ஜூலை 11, 2025 12:38

அவனை கொடுத்த தண்டனை மிக சரியே. பணம் விஷயத்தில் நம்பிக்கை நாணயம் நேர்மை முக்கியம். இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். இந்த பிராடை நம்பி அவ்வளவு பணம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை?


Ramesh Sargam
ஜூலை 11, 2025 12:09

ஆகமொத்தத்தில் தமிழகத்தில் முதல்வரின் கீழ் காவல்துறை கட்டுப்பாட்டில் இல்லை. தினம் தினம் செய்தித்தாள்களை படித்தால் திக் திக் செய்திகள்தான். இதில் பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் தமிழகம் என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பீலா அதாவது பொய் பேசியிருக்கிறார்.


தியாகு
ஜூலை 11, 2025 11:53

இந்த கொலை சாக்காக வைத்து கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பம் அந்த பால் நிறுவனத்தை ஆட்டையை போட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.


KRISHNAN R
ஜூலை 11, 2025 10:47

ஒன்றும் இல்லை... பங்குகள் பங்கு பிரிப்பதில் பிரச்னை.. அவ்ளோதான்.. சிம்பிள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 11, 2025 10:02

கடந்த ஐம்பது வருடங்களாக காவல் துறை புரையோடி போய் விட்டது. காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து நிலையங்களாக மாறிவிட்டது. ஆளும் கட்சி வட்டங்கள் மாவட்டங்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் தான் அந்த அந்த காவல் நிலையங்களுக்கு எஜமானர்கள். பண வசதி ஆள் பலம் இருந்தால் காவல் நிலையத்தில் என்ன வேண்டுமானாலும் சாதித்து கொள்ளலாம். வாய்மையே வெல்லும் என்பது காவல் நிலையங்கள் ஏன் எந்த அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தாது. பொய்மையே வெல்லும் என்பதே சரியானது. இதனை உணர்ந்தால் தானோ என்னவோ தற்போதைய திமுக அரசு பதவி ஏற்றவுடன் சிலர் தமிழக இலட்சனையில் உள்ள கோபுரம் சின்னத்தை மாற்ற முயற்சி செய்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. வாழ்க தமிழ் வளர்க தமிழகம்


venugopal s
ஜூலை 11, 2025 10:00

திருமலா பால் நிறுவனம் ஆந்திர முதல்வர் பாஜகவின் நண்பர் சந்திரபாபு நாயுடுவின் பினாமி என்பது ஊரறிந்த ரகசியம். அவர் சம்பந்தப்பட்டுள்ளதால் மத்திய பாஜக அரசிடமிருந்து அழுத்தம் கொடுத்து இதை தற்கொலை என்று விரைவில் முடித்து விடுவார்கள்!


ஆரூர் ரங்
ஜூலை 11, 2025 11:02

அறியாமையால் தவறாக எழுதியுள்ளார். சந்திரபாபு நாயுடு குடும்பம் நடத்தும் பால் நிறுவனம் ஹெரிடேஜ் பூட்ஸ். . திருமலா காங்கிரசுக்கு நெருக்கம் என்கிறார்கள்.


Selvakumar Krishna
ஜூலை 11, 2025 11:26

குடும்பத்து ஆட்களே சொத்துக்கஆக கொலை செய்து இருப்பார்கள். 45 கோடிக்காக சந்திரபாபு நாயுடு உள்ளே வர தேவை இல்லை.


PR Makudeswaran
ஜூலை 11, 2025 11:47

எல்லாம் தெரிந்தவருக்கு தான் அடி சருக்கும் பீஜே பி ஒன்றுதான் ஊழல் கட்சி. மற்றது எல்லாம் உத்தமி பெற்ற ரத்தினங்கள். அதிலும் சர்க்காரியா கமிஷன் விஞ்ஞான ஊழல்.. கண்ணதாசன் எழுதிய வனவாசம் படித்துவிட்டு மனச்சாட்சியை தொட்டு பார்த்துவிட்டு எழுத பேனாவை பிடிக்க வேண்டும் நண்பரே


அப்பாவி
ஜூலை 11, 2025 09:57

எந்த கோவிலி, மசூதியோ, சர்ச்சோ ஓர் அளவுக்கு மீறி வளர்ந்து பணம் கோடிக்கணக்கில் கொட்டினால் இப்பிடித்தான் ஆளாளுக்கு கொஞ்சம் ஒதுக்கிப்பார்.


GMM
ஜூலை 11, 2025 09:50

கையாடல் பணம். 5 கோடி நிறுவனத்திடம் திரும்ப செலுத்திய தகவல். பின் ஏன் உயிர் இல்லாத உடலாக மாற வேண்டும்.? போலீஸ் நேரடியாக புகார் மனு வாங்கி விசாரிப்பது தடுக்க வேண்டும். ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்து சட்டம் ஆக்க வேண்டும். CSR போன்ற நிர்வாக நீதிக்கு வெளியே எந்த நடவடிக்கையும் இருக்க கூடாது. போலீசுக்கு நிர்வாக பொறுப்பு கிடையாது. முதலில் நிர்வாக அதிகாரிகள் அல்லது நீதிமன்றம் முடிவுக்கு பின் தான் போலீஸ் விசாரணை. முன்பு உள்துறை செயலர் மற்றும் உள்துறை அமைச்சர் தூங்க முடியாது என்பர். தமிழகத்தில் ரோடு ஷோ?


Padmasridharan
ஜூலை 11, 2025 08:37

கடற்கரை போன்ற பொது இடங்களில் வருபவர்களையே அசிங்கமாக பேசி அடித்து மிரட்டி பணம்/பொருள் பறிப்பதே பல காவலர்களுக்கும் வழக்கம். பஞ்சாயத்து என்ற பெயரிலும் புகாரளிக்க வருபவர்களிடமும் பணத்தை அதிகார பிச்சை கேட்டு வாங்குகின்றனர். இது பல கோடி கையாடல், இதில் நிறைய தேறுமென்று பார்த்திருப்பார்கள்..அதன் விளைவு இன்னொரு கொலைக்கு தூண்டல். குத்தம் செஞ்சவனுக்கு தெரியாதா யார், எப்படினு..சாமி


D Natarajan
ஜூலை 11, 2025 08:01

நம்பிக்கை துரோகம் மாபெரும் குற்றம். கடவுள் இருக்கிறான் குமாரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை