உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் மறியல் போராட்டம்; 240 விவசாயிகள் கைது

ரயில் மறியல் போராட்டம்; 240 விவசாயிகள் கைது

சென்னை : பஞ்சாபில் கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்கள் 200 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழகத்தில் நான்கு இடங்களில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடந்தது.சென்னை, மதுரை, மயிலாடுதுறை, திருச்சி ஆகிய இடங்களில், ரயில் மறியலில் ஈடுபட்ட 240 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில் சென்ற 40 விவசாயிகளை, போலீசார் கைது செய்தனர்.இது குறித்து, வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறியதாவது:விவசாயிகளுக்காக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் அமல்படுத்தப்படும். உற்பத்தி செலவோடு, 50 சதவீதம் விலை நிர்ணயம் செய்யப்படும் என்பது உட்பட பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்து, 12 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதை கண்டித்து, டில்லி உட்பட பல்வேறு மாநிலங்களில், விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன் ஏழு கட்ட பேச்சு நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் அடுத்த மாதம் 4ம் தேதி பேச்சு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பேச்சுக்கு சென்று திரும்பிய விவசாயிகள் சங்கத் தலைவர்கள் 200 பேரை, பஞ்சாப் மாநில அரசும், ராணுவமும் இணைந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளன. இது, கடும் கண்டனத்திற்குரியது.பஞ்சாபில் நடக்கும் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். விவசாய சங்கத் தலைவர்களை விடுதலை செய்வதோடு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை, தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி