அரசுடன் பேசும் போக்குவரத்து தொழிற்சங்கத்தை ரகசிய ஓட்டெடுப்பில் தேர்ந்தெடுக்க உத்தரவு
சென்னை:கடந்த, 2011ல் அ.தி.மு.க., ஆட்சியில், அரசு போக்குவரத்து கழகத்தில் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச்சு நடத்த, அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்க பேரவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க., தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'யாருடன் பேச்சு நடத்த வேண்டும் என, நிர்வாகத்துக்கு உத்தரவிட முடியாது' என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சி.குமரப்பன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:ஊதிய உயர்வு, பணி நிபந்தனைகள் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக நிர்வாகத்துடன் பேச்சு நடத்துவதற்கான தொழிற்சங்கத்தை, ரகசிய ஓட்டெடுப்பு வாயிலாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஓட்டெடுப்பில், 50 சதவீதத்துக்கு மேலான தொழிலாளர்களின் ஆதரவை பெற்ற, தொழிற்சங்கம் மட்டுமே தொழிலாளர்களின் பிரதிநிதியாக செயல்பட முடியும். எந்த சங்கமும், 50 சதவீதத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்களின் ஆதரவை பெற முடியாவிட்டால், 20 சதவீதத்துக்கும் மேலான ஆதரவு பெற்ற தொழிற்சங்கங்கள் இணைந்து பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்கலாம். மேல்முறையீடு மனு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.