தமிழர் நலனுக்காக பாடுபட்டவர் டி.வி.ஆர்., பேராசிரியர் ஞானகுமார் புகழாரம்
சிதம்பரம்:சிதம்பரத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்த நாள் விழாவையொட்டி கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, துப்புரவு பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள், அண்ணாமலை பல்கலைக்கழக கால்நடை பண்ணைக்கு 10,000 ரூபாய் மதிப்பில் மாட்டுத்தீவனம் வழங்கும் விழா, சிதம்பரம் அன்பகம் முதியோர் இல்லத்தில் நடந்தது. பேராசிரியர் லதா தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலை பேராசிரியர் ஷீலா, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, துப்புரவு பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினார். சிறப்பு விருந்தினரான அண்ணாமலை பல்கலை பேராசிரியர் ஞானகுமார் பேசியதாவது: காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட ராமசுப்பையர், ஏழை மக்களின் உயர்வுக்காக பாடுபட்டார். திருவிதாங்கூரின் ஒரு பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில், கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வர செய்தார். தமிழர் நலனுக்காக பாடுபட்டவர். சென்னை மாகாணத்தின் பெயரை, 'தமிழ்நாடு' என பெயர் மாற்ற வலியுறுத்தி தலையங்கம் எழுதினார். ஆடம்பரம், விளம்பரம் இல்லாமல் பல சாதனைகள் நிகழ்த்தினார். கன்னியாகுமரியை, தமிழகத்துடன் இணைக்க நடந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார். தமிழ் மக்களின் பிரச்னைகள் குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தொலைநோக்கு சிந்தனையாளராக பணியாற்றினார். மாணவ - மாணவியரின் கல்வி அறிவை மேம்படுத்த, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி வினா - விடை பகுதியை துவங்கினார். தமிழ் மற்றும் தமிழரின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டார். இவ்வாறு அவர் பேசினார். கார்த்திக் ராஜா நன்றி கூறினார்.