உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நில ஆவணங்கள் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்: ஓ.டி.பி., நடைமுறையை எளிமைப்படுத்த கோரிக்கை

நில ஆவணங்கள் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்: ஓ.டி.பி., நடைமுறையை எளிமைப்படுத்த கோரிக்கை

கோவை: கணினி வழியாக பட்டா, சிட்டா உள்ளிட்ட நில ஆவணங்களை பதிவிறக்கம் செய்வதில் உள்ள ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண் நடைமுறையை எளிமைப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. நில ஆவணங்கள் பெறுவதில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கும் வகையில், பதிவிறக்கம் செய்யும் ஒவ்வொரு முறையும் மொபைல் போனுக்கு ஓ.டி.பி., அனுப்பும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. முதலில் தினசரி ஐந்து முறை மட்டும் ஓ.டி.பி., பெறும் வசதி இருந்தது. தற்போது எட்டு முறை வரை பதிவிறக்கம் செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மூன்று ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஓ.டி.பி., வருவதில் தாமதம், சர்வர் டவுன் உள்ளிட்ட பிரச்னைகளால் ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய முடியாமல் பயனாளிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, நிலப்பதிவேடுகள் துறையின் கணினிகள் தரம் உயர்த்தப்படாததால் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. பட்டா, பட்டா மாறுதல் ஆணை, புல வரைபடம், அ -பதிவேடு, ஒருங்கிணைந்த நில ஆவணம் என ஒவ்வொரு ஆவணத்தையும் தனித்தனியாக பதிவிறக்கம் செய்ய தனித்தனி ஓ.டி.பி., பெற வேண்டும். மொபைல் எண்ணை உள்ளீடு செய்த மூன்று நிமிடங்களுக்குள் ஓ.டி.பி.,யை பதிவிட வேண்டும். ஆனால், சில நேரங்களில் 2 நிமிடம் 52 வினாடிகள் கழித்தே ஓ.டி.பி., வருவதால், அதை உள்ளீடு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் மீண்டும் மீண்டும் ஓ.டி.பி., பெற வேண்டியுள்ளது. காலை, மதிய நேரங்களில் சர்வர் டவுன், இரவில் முயற்சித்தாலும் சிக்கல் நீடிக்கிறது. மேலும், எட்டு முறை ஓ.டி.பி., அனுப்பப்பட்டதையே மென்பொருள் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. எட்டு ஆவணங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டதா என்பதை கணக்கில் கொள்வதில்லை. இதனால், முழுமையாக ஆவணங்களை பெற முடியவில்லை என்கின்றனர் விவசாயிகள். தமிழக விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் ரங்கநாதன் கூறுகையில், ''ஒரு நிலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட புல வரைபடங்கள் இருக்கும். நிலம் தொடர்பான பிரச்னைகளின் போது பல்வேறு ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல் எண்களை பயன்படுத்தி ஓ.டி.பி., பெற வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இதிலும் மோசடி நடக்க வாய்ப்புள்ளது. ‘‘பதிவுத்துறை, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் இருப்பதுபோல், வருவாய்த்துறையிலும் தனி அடையாள குறியீடு மற்றும் கடவுச்சொல்(யூசர் ஐடி) வழங்கும் முறையை அறிமுகப்படுத்தினால், நில ஆவணங்களை எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !