மோசமான அரசியல் கலாசாரம் உருவாக த.வெ.க., காரணம்
திருவாரூர்:திருவாரூரில் இந்திய கம்யூ., மாநில செயலர் சண்முகம் அளித்த பேட்டி: கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க, நடிகர் விஜய்க்கு எதற்கு பாதுகாப்பு? யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்பது கூட தெரியாமல் தான், த.வெ.க., என்னும் கட்சி செயல்படுகிறது. நாட்டில் எவ்வளவோ சமூக பிரச்னைகள் உள்ளன. அதற்கு தீர்வு கேட்டு போராடாமல், வாயில் வந்ததை கூட்டங்களில் பேசி வருகிறார் விஜய். நான்கு நிமிடம் பேச, நான்கு பக்கம் எழுதி வைத்து விஜய் பேசுகிறார். அரசியல் கட்சி கூட்டம் நடத்தி, கரூர் சம்பவம் போல் வேறு எங்கும் 41 பேர் பலியானதில்லை. கும்பகோணத்தில், ஜெயலலிதாவும், சசிகலாவும் மகாமக குளத்தில் நீராடியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் வரை இறந்தனர். உ.பி., கும்பமேளாவில், 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதுபோல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் மரணங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், அரசியல் கட்சி கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு இத்தனை பேர் இறந்ததில்லை. கரூர் சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மோசமான அரசியல் கலாசாரம் உருவாக, த.வெ.க., செயல்பாடுகளே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.