மதுரை: மதுரை ஒத்தகடை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், ஓராண்டுக்கு டிபாசிட் செய்திருந்த 5 கோடி ரூபாய் வரையிலான வைப்புத்தொகை முதிர்வடைந்த நிலையில், திருப்பித் தராமல் நான்கு மாதங்களுக்கும் மேலாக அலைக்கழிக்கப்படுகின்றனர்.கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் நபார்டு வங்கியில் இருந்து கடன் பெற்று விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வழங்குகின்றன. டெபாசிட்தாரர்களின் வைப்புத்தொகையில், 25 சதவீதம் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் டிபாசிட் செய்யப்படுகிறது.மும்பையில் உள்ள இன்சூரன்ஸ் கியாரண்டி கார்ப்பரேஷனுக்கு, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக, ஒத்தகடை கடன் சங்கம், 0.15 சதவீதம் டெபாசிட் கியாரண்டி தொகை செலுத்தியுள்ளது. சங்கத்தின் சொந்த நிதியில் இருந்து தனிநபர் கடன், மத்திய கால கடன்கள், சிறுதொழில் கடன்கள் வழங்க வேண்டும். ஆனால் ஒத்தகடை கடன் சங்கத்தில் உறுப்பினர்களிடம் இருந்து பெற்ற வைப்புத்தொகையில் இருந்து சங்க பணியாளர்கள் அவர்களது உறவினர்கள், வேண்டியவர்களுக்கு தனிநபர் கடன் உட்பட, பல்வேறு கடன்களை வழங்கியுள்ளனர்.இக்கடன்களை முறையாக வசூலிக்கின்றனரா என்பதை கூட்டுறவுத்துறை அலுவலரான சார்பதிவாளர் கண்காணிக்க வேண்டும். கடன் கொடுத்த பணியாளர்கள் கடனை திரும்ப வசூலிக்கவில்லை, அதை சார் பதிவாளரும் கண்காணிக்கவில்லை. இதனால், 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 5 கோடி ரூபாய் வரையிலான முதிர்வுத்தொகையை நான்கு மாதங்களுக்கு மேலாக பெறமுடியாமல் பரிதவிக்கின்றனர்.பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
தனியார் நிறுவனங்களில் கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்டு டெபாசிட் செய்யாமல், தமிழக அரசின் கூட்டுறவு கடன் சங்கத்தில் டிபாசிட் செய்துள்ளோம். அந்த நம்பிக்கையை ஒத்தகடை கடன் சங்கம் சிதைத்து விட்டது. திருமணம், கல்வி, வீடு கட்டுவதற்கு என திட்டமிட்டு அடுத்தாண்டில் முதிர்வுத்தொகை கிடைக்கும் என்ற எங்களின் நம்பிக்கை பொய்யாகி விட்டது. ஓராண்டு திட்டமிட்டு செலுத்திய டெபாசிட்டுக்கு முதிர்வுத்தொகை கிடைக்காமல் நான்கு மாதங்களாக அலைக்கழிக்கப்படுகிறோம்.கூட்டுறவுத் துறையும், தமிழக அரசும் இதை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். தொகையை தவறாக பயன்படுத்திய பணியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.எம்.டி.சி.சி., நிர்வாக இயக்குநர் வாஞ்சிநாதன் கூறுகையில், ''ஒத்தகடை கடன் சங்கத்தில் நகைக்கடனுக்கு தொகை போதவில்லை என்பதால் டெபாசிட் தொகையில் இருந்து கடன் தரப்பட்டுள்ளது. பணம் வேறெங்கும் செல்லவில்லை, சங்கத்திற்குள் தான் உள்ளது. ஒவ்வொருவருக்காக பணத்தை திருப்பி செலுத்தி வருகிறோம்,'' என்றார்.