டிஜிட்டல் முறையில் மாஸ்டர் பிளான் 10 நகரங்களுக்கு தயாரிக்கிறது டி.டி.சி.பி.,
சென்னை:தமிழகத்தில், ஐந்து மாவட்டங்களில் 10 நகரங்களுக்கு, 'டிஜிட்டல்' முறையில், 'மாஸ்டர் பிளான்' எனப்படும் புதிய முழுமை திட்டங்கள் தயாரிக்கும் பணியை, நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., துவக்கிஉள்ளது.தமிழகத்தில், சென்னை பெருநகர் பகுதிக்கு மட்டுமே முழுமை திட்டம் உள்ளது. மற்ற நகரங்களுக்கு முறையான முழுமை திட்டங்கள் தயாரிப்பு நிலையில் உள்ளன. ஒப்புதல்
கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கு முழுமை திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டதில், கோவைக்கான புதிய மாஸ்டர் பிளானுக்கு, தமிழக அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.இதைத்தொடர்ந்து, 130 நகரங்களுக்கு முழுமை திட்ட தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு நகரிலும் நிலங்களை, அதன் பயன்பாடு அடிப்படையில் வகைப்படுத்துதல்; அடுத்த 20 ஆண்டுகளில் அங்கு ஏற்படும் மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து தேவை, தொழில், பொருளாதார வசதிகளின் தேவையை கருத்தில் வைத்து, முழுமை திட்டம் தயாரிக்கப்படும். இதன் அடிப்படையில், அந்தந்த பகுதிக்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.இந்த வகையில், ஐந்து மாவட்டங்களில் 10 நகரங்களுக்கு, புதிதாக முழுமை திட்டங்கள் தயாரிப்பு பணிகளை டி.டி.சி.பி., துவக்கி உள்ளது. பயன்படுத்துவது எளிது
இதுகுறித்து, டி.டி.சி.பி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கும்மிடிப்பூண்டி; செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம்; ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர், திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை, ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர், சத்தியமங்கலம், பவானி ஆகிய நகரங்களுக்கு புதிய முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட உள்ளன.