உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.பி.எஸ்., அண்ணாமலை குறித்து ஒருமையில் பேச்சு; வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா

இ.பி.எஸ்., அண்ணாமலை குறித்து ஒருமையில் பேச்சு; வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா

சென்னை: இ.பி.எஸ்., அண்ணாமலை குறித்து ஒருமையில் பேசிய விவகாரத்தில் த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வருத்தம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மற்றும் பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரை ஒருமையில் பேசிய ஆதவ் அர்ஜூனாவின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ., அ.தி.மு.க., கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ஆதவ் அர்ஜூனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை; எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும்.என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது. உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூன் 01, 2025 20:36

ஆதவ் அர்ஜூனாவுக்கு அண்ணாமலையைப்பற்றி கருத்து கூற அருகதையே இல்லை. ஏதோ மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் மன்னித்துவிடலாம்.


Manaimaran
ஜூன் 01, 2025 16:26

ஈ......... இவன் யாரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை