சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, டெல்டா மாவட்டங்களில், 20 லட்சம் டன் நெல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சாகுபடி அதிகரிக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், நெல் கொள்முதலுக்கு போதுமான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகள் திட்டமிடாததால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் கடந்தாண்டை காட்டிலும், 13 சதவீதம் உற்பத்தி அதிகரித்துள்ளது. நடப்பாண்டு நெல் கொள்முதல் செய்வதற்கு, தனியார் வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k7fnvye7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காத்திருப்பு
இதனால், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நோக்கி, செப்டம்பர் 1 முதல் விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். நெல் உற்பத்தி அதிகரித்த நிலையில், கொள்முதல் நிலையங்கள் தாமதமாகவே திறக்கப்பட்டன. நெல் பிடிப்பதற்கு தேவையான சாக்கு மூட்டைகள், தைப்பதற்கு சணல் பைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்படவில்லை. நெல் அறுவடை பணிகள் கடந்த 1ம் தேதி முதல் தீவிரம் அடைந்தன.சுமை துாக்கும் தொழிலாளர்கள் தட்டுப்பாடு, நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்வதற்கு தேவையான லாரிகள் இல்லாதது போன்ற பிரச்னைகளால், கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே, 10 நாட்களுக்கும் மேலாக, நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்து அரிசியாக்கும் பணியும் இதுவரை துவக்கப்படவில்லை. செறிவூட்டப்பட்ட அரிசி கலப்பதற்கு, இப்போது தான் தமிழக அரசு வாயிலாக, 'டெண்டர்' விடப்பட்டு உள்ளது. இதனால், நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இந்நிலையில், டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, நெல் அதிகம் விளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார், விழுப்புரம், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களிலும், கடந்த இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்துள்ளது.விற்க முடியாத நிலை
இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் மட்டும், 20 லட்சம் டன் அளவுக்கு நெல் தேக்கம் அடைந்துள்ளது. மழையால் நெல் மணிகள் முளைக்கத் துவங்கி உள்ளன. இதனால், கடன் வாங்கியும், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் நகைகளை அடகு வைத்தும், விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை விற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து வரும் நிலையில், 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசிடம் தமிழக உணவுத் துறை அனுமதி கோரியுள்ளது. அனுமதி இன்னும் கிடைக்காததால், நிலைமை மோசமாகி வருகிறது. இதனால், நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பெரிய அளவில் நஷ்டத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் உள்குத்து காரணமா?
நடப்பாண்டு நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. பருவ மழை அதிகளவில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும், முன் கூட்டியே நெல் கொள்முதல் ஏற்பாடுகளை, அதிகாரிகள் செய்யவில்லை . இந்த நேரத்தில், ஐந்து முறை உணவுத் துறை நிர்வாக இயக்குநர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனால், திட்டமிடலில் சிக்கல் எழுந்தது. கீழ்மட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தேர்தல் நேரத்தில் அரசிடம் வைத்த கோரிக்கைகள் நிறைவேறாததால், அதிருப்தியில் உள்ளனர். பிரச்னை வரும் என தெரிந்தும், இவர்கள் ஆர்வம் காட்டாமல் அடக்கி வாசித்தது, பிரச்னைக்கு மூலக்காரணமாக கூறப்படுகிறது.
நீரில் மூழ்கிய 40,000 ஏக்கர் பயிர்
வடகிழக்கு பருவ மழையால், 40,000 ஏக்கர் பயிர் நீரில் மூழ்கியுள்ளதாக வேளாண் துறை கணக்கெடுத்துள்ளது.இதில் நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்களும் அடங்கும். மழைநீர் வடியாதபட்சத்தில், இவை அழுகி வீணாகும் நிலை ஏற்படும். வயல்களில் தேங்கியுள்ள நீரை வடிப்பதற்கான முயற்சியில் வேளாண் துறையினர் இறங்கியுள்ளனர். பயிர் 33 சதவீதம் பாதிக்கும் பட்சத்தில், ஆய்வு செய்யப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என வேளாண் துறை அறிவித்துள்ளது.
ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 8,000 ரூபாய் வரை நிவாரணம் வழங்க வாய்ப்புள்ளதாக, வேளாண் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.அ.தி.மு.க., ஆட்சியை விட தற்போது நெல் உற்பத்தி அதிகம்: பன்னீர் செல்வம்
''அ.தி.மு.க., ஆட்சியில் நாற்று நடும் அளவிற்கு முளைத்த நெல் மணிகள் இப்போது சிறியதாகவே முளைத்துள்ளன,'' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.தலைமை செயலகத்தில் அவர் அளித்த பேட்டி: பழனிசாமி ஆட்சியில், ஒரு நாளைக்கு 600 முதல் 700 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டன; இப்போது, நாள்தோறும் 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அ.தி.மு.க., ஆட்சியில், சாலைகளில் குவித்து வைத்திருந்த நெல்மணிகள் முளைப்பெடுத்து, நாற்று நடும் அளவிற்கு வளர்ந்தன. இப்போது, சிறிய அளவில் தான் நெல்மணிகள் முளைத்துள்ளன.முன்பெல்லாம் திறந்தவெளியில், லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்; இப்போது கிடங்குகளிலும், சர்க்கரை ஆலை குடோன்களிலும் பாதுகாப்பாக அடுக்கப்பட்டு உள்ளன. சேலம், மேட்டூர் அணை குறித்த காலத்தில் திறக்கப்பட்டது, 1.80 லட்சம் மின் இணைப்புகள் இலவசமாக வழங்கி, குறுவை தொகுப்பு திட்டத்தை, 214 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தியதால், விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.இதனால், 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை முதல் சுற்றிலேயே திடீரென்று பெய்து வருகிறது. இயற்கையை குற்றம் சொல்ல முடியாது. இருப்பினும், நெல் கொள்முதல் பணிகள் துரிதமாக நடக்கின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்முதல் பணிகள் முழுமையாக முடிந்து விட்டன. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சொற்ப அளவில் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. எடுத்தவுடன் கொள்முதல் செய்ய முடியாது. முதலில், 'டோக்கன்' பெற வேண்டும்; நெல்மணிகளை துாற்ற வேண்டும்; எடை போட வேண்டும்; அதன் பின் தான் கொள்முதல் பணிகள் முடியும்.அதற்கு தேவையான சுமை துாக்கும் தொழிலாளர்கள், இயந்திரங்கள் வேண்டும். ஈரப்பதம், குப்பை எல்லாம் பார்க்காமல் தனியார் நெல் கொள்முதல் செய்வர். ஒரு ஊரில், 1,000 நெல் மூட்டைகள் இருந்தால், அதில், 75 சதவீத மூட்டைகளை தனியார் வாங்கி விடுவர்; இப்போது அவர்கள் வாங்குவதில்லை. அரசிடம் நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் வருகின்றனர். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படுகிறது. மக்களுக்கு இரும்பு சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.