த.வெ.க., நிர்வாகிகள் இருவர் விடுவிப்பு
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் இருந்த த.வெ.க., நிர்வாகிகள் இருவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். கரூரில் த.வெ.க., பிரசார கூட்டத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் தொடர்பான வழக்கில், கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் இருந்த அவர்களின் நீதிமன்ற காவல் முடிந்ததால், மதியழகன், பவுன்ராஜ் இருவரும் கரூர் குற்றவியல் நீதிமன்ற எண் 1ல், நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையில், 'உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சிறப்பு புலனாய்வு குழு கலைக்கப்பட்டு, வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. எனவே, கலைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கில் ஆஜராகி, காவல் நீட்டிப்பு தருமாறு கேட்க முடியாது. மேலும், சி.பி.ஐ., கேட்டால் மட்டுமே காவலை நீட்டிக்க முடியும்' என த.வெ.க., தரப்பு வக்கீல் சீனிவாசன் வாதிட்டார். இதையடுத்து, மதியழகனுக்கும், பவுன்ராஜுக்கும் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர்கள் இருவரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.