ஆட்டோ கட்டணத்தில் கமிஷன் கிடையாது சந்தா முறைக்கு மாறியது ஊபர் நிறுவனம்
புதுடில்லி:வாடகை வாகன சேவைகளை வழங்கும் அமெரிக்காவின் ஊபர் நிறுவனம், இந்தியாவில் வாடகை ஆட்டோக்களுக்கு மட்டும், கமிஷன் அடிப்படையிலான வருமான முறையில் இருந்து சந்தா முறைக்கு மாறி உள்ளது.கமிஷன் முறையில், ஒவ்வொரு பயண கட்டணத்திலும் குறிப்பிட்ட கமிஷனை ஊபர் நிறுவனம் பிடித்துக் கொண்டு, மீதமுள்ள தொகையை வாடகையாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கும். இப்போது, பயண கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முடிவு செய்து கொள்ளலாம். பயணத்திற்கான கமிஷனை, ஊபர் நிறுவனத்திற்கு வழங்க தேவையில்லை. இந்த சேவையை ஆட்டோ ஓட்டுநர்கள் பயன்படுத்த, நிர்ணயிக்கப்பட்ட சந்தா கட்டணத்தை, ஊபர் நிறுவனத்துக்கு முன்கூட்டி செலுத்த வேண்டும்.இந்த சேவையில், ஊபர் செயலியின் வாயிலாக எந்த வகையான டிஜிட்டல் பண பரிமாற்றமும் இருக்காது; ஆட்டோ ஓட்டுநருக்கு வாடிக்கையாளர் நேரடியாக பணம் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் பயண ரத்து கட்டணம் கிடையாது. ஒவ்வொரு பயண ஆரம்பத்திலும், அதற்கான கட்டணத்தை ஊபர் நிறுவனம், பரிந்துரை மட்டுமே செய்யும்.ஆனால், இறுதி கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர் மற்றும் வாடிக்கையாளர் பேச்சு வாயிலாக முடிவு செய்யலாம். ஆட்டோ ஓட்டுநர்கள் தனித்துவமாக இயங்குவர் என்றும், வாடிக்கையாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு இடையே பாலமாக மட்டுமே ஊபர் நிறுவனம் செயல்படும்.இதற்கு முன், ராபிடோ மற்றும் நம்ம யாத்திரி நிறுவனங்கள், இந்த சந்தா முறை சேவைக்கு மாறி உள்ளன. தற்போது, ஊபர் நிறுவனமும் இந்த சேவைக்கு மாறி உள்ளது, வாடகை வாகன சேவையில் போட்டியை அதிகரித்துள்ளது.