முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்ததால் பாதிப்பு: பழனிசாமி
சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் அறிக்கை: 'பெஞ்சல்' புயலால் ஏற்பட்ட பெருமழையால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எவ்வளவு புயல், மழை வந்தாலும் தடுப்பு நடவடிக்கைகள் தயார் என்று, தி.மு.க., அரசு விளம்பரம் செய்தது. அதை நம்பி, லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.புயலால் கனமழை பெய்யும் என, தமிழக அரசுக்கு இந்திய வானிலை மையம் எச்சரித்து வந்தது. ஆனால், நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசு, வானிலை ஆய்வு மையம் எச்சரித்த மாவட்டங்களில், எவ்விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. சாத்தனுார் அணையில் நீர்வரத்து அதிகரிக்கும் போதே, தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். டிசம்பர், 2ம் தேதி அதிகாலை, 2:30 மணியளவில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, அணையிலிருந்து வினாடிக்கு, 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இருந்த கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை, தி.மு.க., அரசு உயர்த்த வேண்டும். கால்நடைகள், வாகனங்களை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட பயிர்களை கணக்கிட்டு, நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.