உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவோம்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவோம்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி

- நமது டில்லி நிருபர் -“ஹிந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்கவில்லை. புதிய கல்வி கொள்கை என்பது, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டம். வேண்டுமென்றே தமிழகத்தில் சிலர் அரசியல் செய்கின்றனர். மாணவர்கள் மத்தியில் சமச்சீரான போட்டிக் களத்தை உருவாக்கி தரும் வகையில் அமைந்த புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது,” என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.மத்திய அரசின், 'சமக்ர சிக்ஷா அபியான்' எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்தக்கு தர வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு ஒதுக்கவில்லை.'மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்து, தமிழக அரசு கையெழுத்திட்டால் மட்டுமே, நிதி ஒதுக்க முடியும்' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைந்தால், அது தேசிய கல்வி கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும். அதில் இணைவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது. ஆனாலும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்திற்கான நிதியை வழங்கக் கோரி, மத்திய அரசிடம் இடைவிடாமல் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.இதையடுத்து, 'மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை, தமிழகத்துக்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட நிதியை தர முடியாது' என்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அமைச்சரின் இந்த அறிவிப்பு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்துகின்றன. பல்வேறு கட்சியினரும் இந்த பிரச்னையில் மத்திய அரசை கண்டித்துள்ளனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே, தமிழகத்துக்கான கல்வி நிதி ஒதுக்கப்படும்; இதில் உறுதியாக உள்ளோம்,” என மீண்டும் அதிரடியாக கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:மாணவர்கள் மத்தியில் சமச்சீரான போட்டிக் களத்தை உருவாக்கி வளர்ச்சிப் பாதைக்கு வழி வகுக்க கூடியதே மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை. இது, பிரதமரின் கனவுத் திட்டமும் கூட.தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்ள விரும்பினால், புதிய கல்விக் கொள்கையில் அது முடியும். ஹிந்தி மட்டுமல்ல; எந்த மொழியும், யார் மீதும், எப்போதும் திணிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில், புதிய கல்விக் கொள்கையை வைத்து அரசியல் செய்கின்றனர்.கல்வி என்பது, அரசிலயமைப்பு சட்டத்தின் அட்டவணைகளின் பொதுப் பட்டியலில் இருந்து வருகிறது. இதை, அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்பதில், மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி